அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே தற்காலிகத்திற்கு பிரச்சனைகளை சமாளிக்க வீட்டில் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்’.. ‘இரண்டு மூன்று நாட்களில் நான் மீண்டும் உனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்வதோடு நம்முடைய காதல் விவகாரத்தை உன் புதிய கணவருக்கும் செல்போனில் அனுப்பி வைத்து விடுகிறேன்’ என கூறியுள்ளார்.
சென்னையில் லிவிங் டு கெதரில் வாழ்ந்த காதலனின் திட்டத்தை நம்பி, கல்யாணம் ஆன 3வது நாளிலேயே கணவனை கைவிட்ட இளம்பெண் தான் தற்போது காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து கதறுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கிழக்கு வலசை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்மிதா. பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை செய்த போது ராமநாதபுரம் பாரதி நகர் கான்சாகிப் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமாலேயே வீடு எடுத்து தங்கி லிவிங் டுகெதரில் வாழ்ந்துள்ளனர்.
சில ஆண்டுகளில் ஸ்மிதாவின் வீட்டில் திருமண ஏற்பாடு செய்யவே அதனை வசந்தகுமாரிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லியுள்ளார். அப்போது ‘அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே தற்காலிகத்திற்கு பிரச்சனைகளை சமாளிக்க வீட்டில் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்’.. ‘இரண்டு மூன்று நாட்களில் நான் மீண்டும் உனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்வதோடு நம்முடைய காதல் விவகாரத்தை உன் புதிய கணவருக்கும் செல்போனில் அனுப்பி வைத்து விடுகிறேன்’ என கூறியுள்ளார்.
மேலும், ‘நான் சொன்னவுடன் வீட்டுக்குள் பிரச்சனை ஏற்படும், அதனை சாதகமாக வைத்து நீ வீட்டை விட்டு வெளியே வந்து விடு உடனே நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து வேறொரு இளைஞருடன் ஸ்மிதாவுக்கு திருமணமும் செய்துள்ளார். சொன்னது போலவே திருமணத்திற்குப் பிறகு குழப்பம் ஏற்பட்டு மீண்டும் வசந்தகுமாரிடமே சென்றுள்ளார். அதன் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய போது அதனை பொருட்படுத்தாமல் சாக்குப் போக்கு சொல்லி அலைக்கழித்து வந்துள்ளார்.
சிறிது காலம் கழித்து தனக்கு வீட்டில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருப்பதாக கூறி தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என ஸ்மிதா புகார் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக வசந்தகுமார் மற்றும் அவர்களது உறவினர்கள் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டுவதாகவும் இது தொடர்பாக ஏற்கனவே ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஸ்மிதா தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் வசந்த குமார் தொடர்ந்து தன்னை மிரட்டுவதாகவும், தன்னுடன் வாழ உடன்படவில்லை எனவும், தன்னை தன் காதல் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று இளம் பெண் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தற்போது ராமநாதபுரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில், காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அடுத்த கட்டமாக வசந்தகுமாரை அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.