தோழியுடன் சுற்றுலா சென்ற மாணவி.. ஓராண்டு சிறைத் தண்டனை விதித்த துபாய் நீதிமன்றம்.. காரணம் என்ன?

1745

சுற்றுலா சென்ற மாணவி..

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் பொலன்கொ டி லாஸ் சாண்டோஸ் (21). இவர், அங்குள்ள லேமேன் கல்லூரியில் படித்து வருகிறார். தனது தோழியுடன் இஸ்தான்புல் நாட்டிற்குச் சுற்றுலா சென்ற எலிசபெத், சுற்றுலா முடிந்து நியூயார்க் திரும்புகையில், ஜூலை 14-ம் தேதி, இஸ்தான்புல்லிலிருந்து துபாய் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பாதுகாப்பு பரிசோதனையின்போது, இதற்கு முன்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்ததால் எலிசபெத் தன் இடுப்பில் ஒரு ‘பெல்ட்’ அணிந்திருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

அந்த பெல்ட்டை, அங்கிருந்த பெண் ஊழியர்கள் தனி அறைக்கு அழைத்துச் சென்று கழற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்கள் சற்று கடுமையாக நடந்து கொண்டதாகவும், தழும்புகள் இன்னும் குணமடையாததால் எலிசபெத்துக்கு அது மேலும் வலியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதனால், மீண்டும் அதை அணிவதற்கு உதவி கேட்டபோது அங்கிருந்தவர்கள் கேலி செய்ததால், அவர்களிடம் எலிசபெத் கடுமையாக நடந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை ஓர் அறையில் அடைத்துவைத்து, அரேபிய மொழியில் எழுதிய ஆவணம் ஒன்றில் கையெழுத்திட எலிசபெத்தைக் கட்டாயப்படுத்தியதாக அவரது தோழி தெரிவித்திருக்கிறார்.


இந்த விவகாரத்தில், எலிசபெத் பயணிப்பதற்கு தடைவிதித்த துபாய் அரசு, அவர்மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்வரை, அவர் துபாயிலிருந்து வெளியேற முடியாது எனத் தெரிவித்திருக்கிறது.

பயணத்தடை காரணமாக துபாயில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிக்கித்தவித்த பின்னர், அண்மையில் எலிசபெத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, 2,700 டாலர் அபராதம் செலுத்திவிட்டு, துபாயிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

ஆனால், துபாய் வழக்கறிஞர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இதனால் எலிசபெத்துக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

எலிசபெத்திற்கு உதவி செய்யும் மனித உரிமை ஆர்வலரான ராதா ஸ்டிர்லிங், பத்திரிகையிடம் பேசியபோது, “6 மணி நேரம் மட்டுமே துபாயில் இருந்திருக்க வேண்டிய எலிசபெத், பல மாதங்களாக இங்குத் தங்கியிருக்கிறார். இதனால் வழக்கறிஞர்களுக்காகவும், தனது இதர செலவிற்காகவும் 50,000 டாலர் வரை பணத்தை இழந்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை, “அமெரிக்கக் குடிமகள் ஒருவர் துபாயில் பிரச்னையில் சிக்கியுள்ளதாகத் தகவல் அறிந்தோம். அமெரிக்காவிலுள்ள வக்கீல்கள், சட்ட பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்களிடம் இதற்காக ஆதரவைத் திரட்டி வருகிறோம்.

மேலும், துபாயில் நடக்கக்கூடிய மோசடிகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பான எச்சரிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்துக்கொண்டும் வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.