நடுரோட்டில் துடிதுடித்து புதுப்பெண் உயிரிழந்த சோகம்!!

324

அறுந்து விழுந்த கேபிள் வயரில் மின்சாரம் பாய்ந்து டூவீலரில் சென்ற புதுப்பெண்ணான செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவில் உள்ள சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ்(36). இவர் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள இப்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து லட்சுமிபாய் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரியும் லட்சுமணன் டூவீலரில் வந்துள்ளார். அவர் லட்சுமிபாயின் ஊரைச் சேர்ந்தவர் என்பதால்,வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார்.

இதனால் அவருடன், செவிலியர் லட்சுமிபாய் ஜாதவ் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது குனிகல் நோக்கி டூவீலர் சென்ற போது சாலையில் நடுவில் இருந்து கேபிள் வயர் அறுந்து டூவீலரில் சென்ற லட்சுமிபாய், லட்சுமணன் ஆகியோர் மீது விழுந்தது.

அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால், செவிலியர் லட்சுமிபாய் ஜாதவ் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த தலைமை ஆசிரியர் லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லட்சுமி பாய் உடல், பிரேத பரிசோதனைக்காக குனிகல் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குனிகல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தான் லட்சுமிபாய் ஜாதவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியால் சின்சலகட்டே பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.