நடுரோட்டில் மனைவியை சுத்தியால் தலையில் அடித்து கொலை செய்த கணவன்!!

160

திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது சதீஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ரேவதியை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவேஷ் என்ற மகனும், தாரிகா என்ற மகளும் உள்ளனர். ரேவதி மாங்கால் கூட்ரோட்டு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

சமீபகாலமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வழக்கம் போல் நேற்றும் காலை ரேவதி வேலைக்கு நடந்து சென்றுள்ளார்.

ரேவதிக்குப் பின்புறமாக வந்த சதீஷ், ரேவதியைக் காலால் எட்டி உதைத்து, கையில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியலால் தலையில் தாக்கத் தொடங்கினார். இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த ரேவதி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதில் சதீஷ் தப்பி ஓடி விட்டார். அத்துடன் ரேவதியை மீட்டு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ரேவதியின் பாட்டி சீத்தா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர். மனைவியை கணவன் சுத்தியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.