தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காணாமல் போன 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று டிசம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, சகோதரன் பள்ளிக்கு சென்று விட கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுவன் மாயமாகியுள்ளார். சிறுவன் கருப்பசாமி கழுத்தில் ஒன்றை பவுன் தங்க செயினும் கையில் 1 கிராம் தங்க மோதிரமும் அணிந்து இருந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சிறுவன் கருப்பசாமி கிடைக்கவில்லை என்றதும் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் சிறுவனது பக்கத்து வீட்டின் மடியில் சிறுவன் கருப்பசாமி மூச்சுப் பேச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாகவும், சிறுவன் உயிரிழந்து பல மணி நேரம் ஆகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கருப்பசாமி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவன் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு கிராம் மோதிரம் காணவில்லை என்று பெற்றோர் தெரிவித்தனர்.
கருப்பசாமியை தங்க நகைக்காகக் கடத்திச் சென்று கொலை செய்து விட்டு மாடியில் போட்டார்களா? அல்லது மரணத்திற்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.