சென்னை…
சென்னையில் கேளம்பாக்கம் பொன்மார் கிராமத்தில் வசித்து வரும் 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. அவனது பெற்றோர், அவனை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல்போன மாணவனை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவருடன் மாணவனுக்கு தொடர்பு இருந்ததும், அந்த ஆசிரியை ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு சென்று விட்டதும் தெரியவந்தது.
கோயம்புத்தூர் போலீசாருடன் பேசியதில் அந்த ஆசிரியை தங்கி இருந்த இடத்தை சோதனை செய்தனர். அப்போது அவருடன் காணாமல் போன மாணவனும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியில் வசித்து வந்தவர் எப்சிபா. ஆசிரியையாக பணிபுரிந்த இவருக்கு 2018 ல் திருமணமாகி சில மாதங்களில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அந்த பகுதியில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்தவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார்.
அங்கு 11ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் சகஜமாக பழகி வந்தார். அந்த மாணவனிடம் தனக்கு தேவையான பொருட்களை அவ்வப்போது வாங்கி வரச் சொல்வார். சில நேரங்களில் தான் தங்கியிருந்த அறைக்கு மாணவனை அழைத்து செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த பிரச்னை வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என நினைத்து வேலையை ராஜினாமா செய்து விட்டு கோயம்புத்தூர் சென்று விட்டதாகக் கூறினார். மாணவன் விடாமல் தன்னை தேடி வந்து தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறியதால் அவனை தன்னுடன் அழைத்து சென்று விட்டதாக ஆசிரியை கூறியுள்ளார். இச்சம்பவத்தின் படி ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்து போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர்.