பிரபல மலையாள சீரியல் நடிகை எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட கொடிய போதை பொருட்களை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது கேரள சின்னத்திரை வட்டாரத்தில் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கேரள மாநிலம், ஒழுகுப்பாறையை சேர்ந்த நடிகை பார்வதி என்ற ஷாம்நாத்(36) போதைப்பொருட்களை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக பரவூர் இன்ஸ்பெக்டருக்கு நடிகை போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடைபெற்ற சோதனையில் நடிகை பார்வதி போதைப் பொருட்களை வைத்திருந்தது நிரூபணமான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
சின்னத்திரை நடிகை பார்வதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மூன்று கிராம் எம்.டி.எம்.ஏ. கொடிய போதை பொருள் இருந்தது கைப்பற்றப்பட்டது. போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலுடன் நடிகை ஷாம்னத்துக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று நடிகை ஷாம்னத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஷாம்னத் தனது கணவருடன் கொல்லத்தில் வசித்து வந்தார்.
நேற்று முன் தினம் கொல்லம் மாவட்டம் கொட்டியத்தில் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருட்களுடன் ஒரு பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நேற்று மாலை நடிகை ஷாம்னத் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.