பிரித்தானியாவில் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள, இரண்டு இந்திய குழந்தைகளின் குடியுரிமையை மாற்றுவதற்கு, நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, கடந்த 2004-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான, பிரித்தானியாவின் பர்மிங்காம் நகருக்கு குடிபெயர்ந்தனர்.
இவர்களுக்கு, 11 வயதில் மகன், 9 வயதில், மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 2015-ஆம் ஆண்டு, கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, இரு குழந்தைகளையும், பர்மிங்காம் அதிகாரிகள், அங்குள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு பராமரித்து வருகின்றனர். ஐந்து ஆண்டுகளாக, அந்த குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதனால், சட்டப்பூர்வமான காரணங்களுக்காக, அந்த இரண்டு குழந்தைகளையும், பிரித்தானியாவின் குடியுரிமை பெற்றவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கையை, அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதை எதிர்த்து, பர்மிங்காம் நீதிமன்றத்தில், குழந்தைகளின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நான் இந்திய குடிமகன். என் குழந்தைகளும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள். இந்தியாவுக்கு செல்ல விரும்புகிறோம். இந்திய குடிமக்களாகவே, என் குழந்தைகள் தொடர வேண்டும்.
அவர்களுக்கு பிரித்தானியாவின் குடியுரிமை தேவையில்லை. அவர்களுக்கு பித்தானியா குடியுரிமை அளித்தால், இந்திய குடியுரிமையை இழந்து விடுவர். எனவே, அவர்களை பிரித்தானியாவின் குடியுரிமை அளிக்க, அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பர்மிங்காம் நீதிமன்றம், குழந்தைகளின் குடியுரிமையை மாற்றுவது, பல்வேறு முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த விஷயத்தில் கவனமாக முடிவு எடுக்க வேண்டும் என, உத்தர விட்டு, குடியுரிமையை மாற்றுவதற்கு தடை விதித்தது.
இதையடுத்து, குழந்தைகளின் தந்தை, பர்மிங்காம் காப்பக அதிகாரிகளை நாட முடிவு செய்துள்ளார். இது குறித்து காப்பக அதிகாரிகள் கூறுகையில், நீதிமன்ற உத்தரவு, தற்போது தான் கிடைத்துள்ளது. அதை படித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.