புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை அடுத்த வடுக்குப்பம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி இளவரசி (36). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த இளவரசி, குழந்தைகளுடன் வடுக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார்.
அதன்பிறகு, இளவரசிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜூ (எ) கிருஷ்ணப்பன் (48) என்பவருக்கும் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. இதனால் இளவரசியின் வீட்டுக்கு கிருஷ்ணப்பன் அடிக்கடி சென்று வந்தார்.
இதற்கிடையே கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து இளவரசி மாயமானார். அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் நேற்று நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் இளவரசியின் தாய் ஆதிலட்சுமி புகார் அளித்தார். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளவரசிக்கும் கிருஷ்ணப்பனுக்கும் உள்ள தொடர்பு தெரியவந்தது. இதனால் அவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்து கிருஷ்ணப்பனை பிடித்து விசாரித்தனர்.
அதில், இளவரசியை கொலை செய்ததை கிருஷ்ணப்பன் ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த 9ம் தேதி இரவு இளவரசி வீட்டிற்கு சென்ற கிருஷ்ணப்பன், இளவரசியிடம் தகராறில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் தகராறில் ஆத்திரமடைந்த கிருஷ்ணப்பன் இளவரசியின் கன்னத்தில் அறைந்தார். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்படி இருந்தும் கோபம் அடங்காத கிருஷ்ணப்பன், இளவரசியின் கழுத்தை நைலான் கயிற்றால் நெரித்து கொன்றார்.
பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, வாழை இலையில் மூடி வைத்து இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு அன்றிரவு வடுக்குப்பம் பகுதியில் இருந்து தமிழகம் திருவக்கரைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர், அங்குள்ள கல் குவாரி பகுதியில் சடலத்தை வீசி சென்றுள்ளார்.
விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் கிருஷ்ணப்பனை இன்று திருவக்கரை கல் குவாரி பகுதிக்கு கொண்டு சென்று அங்கு சாக்கு மூட்டையில் கட்டியிருந்த இளவரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கிருஷ்ணப்பனை கைது செய்த போலீசார், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.