பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்!!

166

சங்கராபுரம் அருகே பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு காணாமல் போனதாக தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் பிரகாஷ்.

லாரி ஓட்டுநர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஆதவன் என்ற 13 வயது மகனும், அக்சையா மற்றும் அதிசயா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இதில் அதிசயா அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தாள். அதன் பிறகு அதிசயாவை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அதிசயா கிடைக்கவில்லை. இதனால் அதிர்ந்து போன அதிசயாவின் தந்தை பிரகாஷ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமி அதிசயாவை அக்கிராமத்தில் உள்ள கிணறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அதே கிராமத்தில் அன்றைய தினம் பிரசத்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் சிறுமி அதிசயா காணாமல் போனதால் எங்கு பார்த்தாலும் அழுகை குரலும் அலறல் சத்தமாக காணப்பட்டது. அக்கிராமமே சோகத்தில் மூழ்கி தேர் திருவிழாவை கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், மோப்பநாயை வரவழைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிசயாவை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற பூட்டை கிராமத்துக்கு வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார், சல்லடை போட்டு சிறுமி அதிசயாவை தேடி வந்தனர். பின்னர் காவல்துறையினர் ஒரு கட்டத்தில் அதிசயாவின் தந்தை பிரகாஷ் மற்றும் தாய் சத்யாவிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சத்யாவிடம் தீவிர விசாரணை நடத்திய போது, அவர் போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தான் அதே கிராமத்தை சேர்ந்த 4 வாலிபர்களுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும், அதில் ஒருவர் சம்பவத்தன்று தன்னை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார் என கூறினார். இதற்கு போலீசார், வந்த நபர் குறித்து விசாரித்த போது அவர் தொடர்பான அடையாளத்தை கூறியுள்ளார்.

பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்தபோது, சத்யா கூறிய தகவலுக்கும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளுக்கும் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை உறுதி செய்தனர்.

அதில் சத்தியா தான், அவரது மகளை அழைத்து சென்றது அதில் பதிவாகியிருந்தது. பின்னர் சத்தியாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தன் மகளை தானே கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்த போது, தான் அதே ஊரில் உள்ள பல்வேறு நபர்களிடம் சுமார் ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடன் வாங்கிய விவரம் தனது கணவருக்கோ, தனது குடும்பத்தினருக்கோ தெரியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை.

கடன் வாங்கியவர்களிடம் தான் கூறியிருந்த காலக்கெடுவும் முடிவடைய உள்ள நிலையில் குழந்தையை கொன்று விட்டால், கடன் கொடுத்தவர்கள் தன் மீது அனுதாபப்படுவார்கள், கடனை கேட்க மாட்டார்கள் என நினைத்து, சம்பவத்தன்று எனது மகளை தானே அரசம்பட்டு சாலையோரத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்தேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து சத்யாவை போலீசார் கைது செய்து எப்படி மகளை கொன்றார் என்பதை நடித்து காட்ட சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் போலீசாருக்கு நடித்து காட்டினார். பின்னர் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.