மகள், மருமகன், பேத்தியை வயநாட்டிலேயே தகனம் செய்துவிட்டு, கனத்த இதயத்துடன் குன்னூர் வந்த தந்தை!!

815

நிலச்சரிவில் உயிரிழந்த மகளின் உடலை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் வயநாட்டில் தகனம் செய்துவிட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக மாவட்டமான நீலகிரி, குன்னூர் அடுத்த கரன்சி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் கவுசல்யா (26) வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

தனது மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவரும் நிலச்சரிவில் உயிரிழந்ததை அறிந்த ரவிசந்திரன், வயநாடு சென்றுள்ளார். அங்கிருந்து அவர்களது உடலை குன்னூர் கரன்சி பகுதிக்கு கொண்டு வர முடியாமல், அங்கேயே அவர்களது உடல்களை தகனம் செய்தார்.

இதையடுத்து, அங்கிருந்து கரன்சி பகுதிக்கு திரும்பிய ரவிச்சந்திரன் கண்ணீருடன் தனது வேதனையை தெரிவித்தார்.


அவர் கூறுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய மகளுக்கும், சூரல்மலை பகுதியைச் சேர்ந்த பிஜிஸ் குட்டன் (36) என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் பெண் குழந்தை உள்ளது.

இதில் பிஜிஸ் குட்டன் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். பிஜிஸ் தனது பெற்றோருடன் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குடும்பத்துடன் மூவரும் உயிரிழந்து விட்டனர். அவர்களது உடல் குன்னூருக்கு கொண்டு வர முடியாததால் அங்கேயே தகனம் செய்துவிட்டோம். பிஜிஸ் குட்டனின் பெற்றோர் உட்பட மூவரின் உடல் தேடப்பட்டு வருகிறது” என்றார்.