மண்ணுக்குள் சேர்ந்த காதலர்கள்… கணவன் அருகிலேயே புதைக்கப்பட்ட சர்மிளா… கதறிய நண்பர்கள்!!

325

மரணம்… காதலர்களுக்கு தான்.. காதலுக்கு இல்லை என்பது படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. சர்மிளாவின் முடிவைப் பார்த்து இரக்கப்படுவதோ, வருத்தப்படுவதோ இல்லாமல் பலரும், பெத்தவங்களைக் கஷ்டப்படுத்தினா இப்படித் தான் என்று பேசி வருகிறார்கள்.

இன்னொருபுறம், அட… என்ன இருந்தாலும் பொண்ணு தானே… அவ புருஷனை இப்படியா சாதி வெறிப்புடிச்சு வெட்டுவீங்க என்பவர்களும் உண்டு. யார் என்ன பேசினாலும், சந்தோஷமாக சிறகடித்து வாழ வேண்டிய இரண்டு பேர் அநியாயமாக உயிரை இழந்திருக்கின்றனர்.

சென்னை பள்ளிக்கரணையில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்பவர் பிப்ரவரி 24ஆம் தேதி இரவு 8 மணியளவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும், அவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஷர்மிளாவின் உறவினர்கள் பிரவீனை கொடூரமாக படுகொலை செய்ததும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சர்மிளா கடந்த 14ம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.


தற்கொலை முயற்சியின் போது, ஷர்மிளா கழுத்தில் நரம்பு பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அதன்பின், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 22ம் தேதி இறந்தார்.

இதற்கிடையில், சர்மிளா எழுதிய தற்கொலை கடிதத்தில், தனது இறப்புக்கு பெற்றோர் துரை, சரளா மற்றும் நரேஷ், தினேஷ் ஆகியோர் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் ஷர்மிளாவின் சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இருவரின் மரணத்திற்கும் நீதி கேட்டு பிரவீனின் குடும்பத்தினர் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஷர்மிளாவின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

பின்னர் பிரவீனின் பெற்றோரிடம் பிரேத பரிசோதனை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஷர்மிளாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இப்படி வாழ வந்த பெண்ணை இழந்துவிட்டோம் என்று பிரவீனின் பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து, பள்ளிக்கரணையில் பிரவீன் உடல் அருகே சர்மிளாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

ஆசை ஆசையாய் காதலித்து சந்தோஷமாக வாழ வேண்டிய இளம் ஜோடிகள் அடுத்தடுத்து மண்ணை விட்டு பிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் ஆணவக் கொலைக்கு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.