மது போதையில் தகராறு செய்த கணவனை குத்திக்கொன்ற பெண் காவலர்!!

120

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (35). தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மங்களலட்சுமி (30).

இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர்காவல்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தஸ்வந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சீனிவாசன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த சீனிவாசன் மீண்டும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

மேலும், அவர் மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மங்களலட்சுமி வீட்டில் காய்கறி வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் குத்தியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த சீனிவாசனை மீட்டு, பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த நசரத்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, சீனிவாசன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .


இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மங்களலட்சுமியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊர்க்காவல் படையில் பணிபுரியும் மனைவியே குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.