மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன்.. போலீஸுக்கு உதவிய சிசிடிவி!!

444

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைகிணறு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரும் நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த ஜான்சிராணி கீதா என்ற பெண்ணும் சாத்தான்குளத்தில் உள்ள கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு அனன்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி கணவன், மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளனர். அந்தோணி ராஜ் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

ஜான்சிராணி கீதா மாயமானார். ஜான்சிராணி குறித்து கேட்டதற்கு அந்தோணிராஜ் சரியான பதில் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜான்சிராணியின் உறவினர்கள் நாசரேத் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


அதே தினத்தில் வீட்டிற்கு வந்த கணவர் அந்தோணிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தைலாபுரத்தில் உள்ள அந்தோணிராஜின் வீடு உள்ள பகுதியில் இருந்து,

சாத்தான்குளம் வரையுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர். அதில், அந்தோணிராஜ், ஜான்சிராணி கீதா இருவரும் ஒரே பைக்கில் சாத்தான்குளம் பகுதிக்கு வந்துள்ளது தெரிய வந்தது.

சாத்தான்குளம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் தஞ்சைநகர் வழியாக திசையன்விளை நோக்கி சென்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது,

அதே பகுதியில் உள்ள இடைச்சிவிளையிலுள்ள தேரிக்காட்டுப் பகுதிக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அத்தேரிக்காட்டுப் பகுதியில் தனிப்படை போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டு அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்தனர்.

அந்த பெண், மாயமான ஜான்சிராணி கீதாதான் என்பது உறுதி செய்தனர். இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “கணவன், மனைவி இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள். இருப்பினும் காதல் திருமண்ம செய்து கொண்டு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர் என அக்கம் பக்கத்தினர் கூறினார்கள்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை வருவதும் உறவினர்கள் சமாதானம் செய்து வைப்பதுமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தான் கடந்த 21-ம் தேதி வெளியே செல்லலாம் என்று தனது மனைவி ஜான்சிராணி கீதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அந்தோணிராஜ் திசையன்விளை நோக்கி சென்றுள்ளார். அதற்கு முன்னதாக தனது குழந்தைகள் இருவரையும் மனைவி வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்பின் திசையன்விளை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே தைல மரங்கள் மற்றும் கொல்லாம்பழ மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர் துப்பட்டாவால் ஜான்சிராணி கீதாவின் கழுத்தில் இறுக்கி கொலை செய்திருக்கலாம். சி.சி.டி.வி காட்சி பதிவுகளில் இருவரும் சிரித்துப் பேசியபடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

பின்னர் வீட்டிற்கு திரும்பும் போது அந்தோணிராஜ் பைக்கில் தனியாக செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. அதன் பின்னரே வீட்டிற்கு வந்து அந்தோணிராஜூம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் சி.சி.டி.வி காட்சி பதிவுகளே உதவிகரமாக இருந்தது” என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜான்சி ராணி கீதா காணாமல் போனதாக நாசரேத் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அந்தோணி ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும்,

ஜான்சி ராணி உடல் கிடந்த பகுதியான இடைச்சிவிளை, தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் மூன்று காவல் நிலையத்திலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.