மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன்.. பிரேத பரிசோதனையில் சிக்கியது எப்படி?

262

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகாவில் உள்ள கொல்லரஹத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கப்பா. இவரது மனைவி சைத்ரா. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சங்கரலிங்கப்பாவுக்கு குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சங்கரலிங்கப்பா குடிப்பதற்காக கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியது தெரியவந்தது. இந்த கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக சங்கரலிங்கப்பாவுக்கும், சைத்ராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த மார்ச் 14ம் தேதி வீட்டில் சைத்ரா இறந்து கிடந்தார்.கணவரின் நடவடிக்கையால் மனமுடைந்த சைத்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என உறவினர்கள் கருதினர். ஆனால், சைத்ரா சாவில் மர்மம் இருப்பதாக அவரது மாமா ஜெயண்ணா சந்தேகம் தெரிவித்தார். இதுகுறித்து அரசிகெரே கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனவே, இயற்கைக்கு மாறான வழக்கின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் சைத்ரா யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் சைத்ராவின் கணவர் சங்கரலிங்கப்பாவை காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் கடந்த மார்ச் 14ம் தேதி சங்கரலிங்கப்பா குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சைத்ரா சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இந்நிலையில் இன்று சங்கரலிங்கப்பாவை போலீசார் கைது செய்தனர். மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.