மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது!!

130

ஊத்துமலை அருகே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே கருவந்தா உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லக்காளை மகன் சுரேஷ் (42). கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் கீழ சுரண்டையைச் சேர்ந்த குத்தாலிங்கம் மகள் சிவனம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு மதுமிதா (9), கனிஷ்கா (4), என்ற இரண்டு மகள்களும் கதிர்வேலன் (6) என்ற மகனும் உள்ளனர். சுரேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

இதனால் சிவனம்மாள் தனது தாய் வீட்டில் சுமார் 9 மாதங்கள் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

பின்னர் சுரேஷ் தனது மனைவியை சமாதானப்படுத்தி ஊருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். தொடர்ந்து சுரேஷ் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தாததால் கணவன்-மனைவியிடையே தகராறு நடந்து வந்துள்ளது.


இந்நிலையில் சுரேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் சுரேஷை, மனைவி சிவனம்மாள் நெல்லையிலுள்ள மருத்துவரிடம் நேற்று சிகிச்சைக்காக அழைத்துச்சென்றுள்ளார்.

தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது பிடிக்கவில்லை எனக்கூறி ஊருக்கு வரும்போது மனைவியுடன் தகராறு செய்து கொண்டே வந்துள்ளார்.
இந்நிலையில் ஊருக்கு வந்தவுடன் சிவனம்மாள் பள்ளியில் இருந்து வந்த தனது குழந்தைகளுக்கு டீக்கடையிலிருந்து காபி மற்றும் பலகாரங்கள் வாங்கி சாப்பிட கொடுத்துள்ளார்.

குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு விளையாட வெளியே சென்றவுடன் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கையில் அரிவாளுடன் வீட்டிற்குள் நுழைந்த சுரேஷ் திடீரென மனைவியின் கழுத்தில் வெட்டினார்.

வெட்டுப்பட்ட சிவனம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே சுரேஷ் அரிவாளுடன் ரோட்டிற்கு வந்தார்.

அங்கு வந்த பஸ்சை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். அப்போது அவரை பிடிக்க பொதுமக்கள் திரண்டதால் அங்கிருந்து தப்பி ஓடி ஊருக்கு அருகில் உள்ள குளத்துக்கரையில் நின்று கொண்டிருந்தார்.

அங்கு அவரை பிடிக்க வந்த போலீசாரை கண்ட சுரேஷ் அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். உடனே சுரண்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுரேஷை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டனர்.

உடனே ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வசந்தி, எஸ்ஐ பேச்சியம்மாள் மற்றும் போலீசார், சுரேஷை கைது செய்தனர். கொலை நடந்த இடத்திற்கு நெல்லையிலிருந்து தடயவியல் நிபுணர் ஆனந்தி வருகை தந்து ரத்த மாதிரி மற்றும் பல்வேறு பரிசோதனைகளை செய்தார்.

சிவனம்மாளின் உடலை பார்த்து அவரது மூன்று குழந்தைகளும் கதறி அழுதது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.