மனைவி, குழந்தைகள் கொலை செய்த கேரள நபருக்கு இங்கிலாந்தில் 40 ஆண்டுகள் சிறை!!

599

கேரளா….

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு. இவர் இங்கிலாந்தின் என்.ஹெச்.எஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவந்தார். அதன் காரணமாக தன் கணவர் சாஜு (50), இரண்டு குழந்தைகளுடன் இங்கிலாந்தின் கெட்டரிங் பகுதியில் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15, 2022 அன்று பணிக்கு அஞ்சு வரவில்லை.

தொலைபேசியிலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால், அவர் வசித்த இல்லத்துக்குச் சென்று சக ஊழியர்கள் பார்த்தபோது அஞ்சுவும் அவரின் இரண்டு குழந்தைகளும் மூர்ச்சையற்று கிடந்திருக்கின்றனர். உடனே, இது தொடர்பாக காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டு மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அஞ்சுவையும் அவரின் இரண்டு குழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று பேரும் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது.


அப்போதுதான் அஞ்சுவின் கணவர் சாஜு அவரின் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலைசெய்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகச் சந்தேகித்ததாகவும், குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கு இங்கிலாந்தின் நார்த்தாம்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “நீங்கள் உங்கள் மனைவியின் உயிரைப் பறிக்கும்போது, ​​உங்கள் சிறு குழந்தைகள் தங்கள் தாயிக்காக கதறினர். அவர்கள் நேரில் கண்ட சாட்சிகளா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தவர்கள். அவர்களின் தாய் உங்களால் காயப்படுத்தப்படுகிறார் என்பதை பார்த்திருப்பார்கள்” என்றார்.

மேலும் இந்த வழக்கில் சாஜு, மனைவிமீது சுமத்திய குற்றங்கள் எங்கும் உறுதிசெய்யப்படவில்லை. மாறாக, சாஜு போனை சோதனையிட்டபோது, மனைவி பணிக்குச் சென்ற பிறகு பல டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த வழக்கில் சாஜுவுக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது.