மரத்தால் வந்த பிரச்சனை அண்ணன் குடும்பத்தையே காலி செய்த தம்பி!!

209

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). மேலும், மாரிமுத்துவின் தம்பி முருகன் (35) அவரது மனைவி சிவரஞ்சனி (24).

இந்த நிலையில், முருகன் வீட்டின் அருகில் உள்ள மரத்தை வழிப்பாதைக்கு இடையூறாக இருந்ததாக, அண்ணன் மாரிமுத்து மரத்தை வெட்டியுள்ளார்.

இதனால் மாரிமுத்துவுக்கும், தம்பி முருகனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், முருகனுக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கப்பட்டு உள்ளது.

இதனால், முருகன் வீட்டுக்குச் செல்லும் பாதையில் மாரிமுத்து, வழியை மறித்து வாகனத்தை நிறுத்தி உள்ளார். இதனால் மாரிமுத்துவுக்கும், முருகனுக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகியோர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், மாரிமுத்து மற்றும் ருக்மணியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த கணவன் – மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், சாமல்பட்டி போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மேலும், இச்சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனியை தேடி வந்தனர். இந்த நிலையில், கொலை செய்து தப்பி ஓடிய முருகன் பவானி பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், சிவரஞ்சனியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.