மாயமான இந்திய மாணவி ஸ்காட்லாந்தில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!

35

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 22 வயது இளம் பெண் சாண்ட்ரா சாஜு . இவர் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கிலுள்ள ஹெரியாட்-வாட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

டிசம்பர் 6 ம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே சென்ற சாண்டிராவை அன்று முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், அந்நாட்டு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பேரில்விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவர்கள் மேற்கொண்ட சோதனையில் அவர் கடைசியாக அப்பகுதியிலுள்ள ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு சென்றது, அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த காட்சிகளையும் அவரைப் பற்றிய குறிப்புகளையும் வெளியிட்ட போலீஸார் அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், அந்த தேடுதல் முயற்சியில் தன்னார்வலர்களும் இணைந்துக்கொண்டனர். இந்நிலையில்,

கடந்த டிசம்பர் 27ம் தேதி காலை 11 மணிக்கு எடின்பர்க்கிலுள்ள நியூபிரிச் கிராமத்திலுள்ள ஆற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.


இதன் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அது காணாமல் போன சாண்டிராவுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கேரளாவிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு ஸ்காட்லாந்து அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

அத்துடன் அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும், இதுவரை சந்தேகப்படும்படியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.