“மிஸ் பண்றேன் அம்மா” தாயைக் கொன்று விட்டு ஸ்டேட்டஸ் போட்ட மகன்!!

268

குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாயை கொலைச் செய்து விட்டு, சமூக வலைத்தளத்தில், ‘உங்களை மிஸ் பண்றேன் அம்மா’ என்று மகன் போஸ்ட் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட தாயாரை, 21 வயது மகன் கவனித்து வந்த நிலையில், தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மகனே தாயைக் கொலைச் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் பகத்சிங்ஜி தோட்டத்தைச் சேர்ந்தவர் நிலேஷ் கோசாய் (21). இவரது தாயார் ஜோதிபென். ஜோதிபென்னுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவரது கணவரும், மற்ற குழந்தைகளும் அவரை விட்டி பிரிந்து சென்று வாழ்ந்து வருகின்றனர். மகன் நிலேஷ் மட்டும் தனியே தனது தாயர் ஜோதிபென்னை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நிலேஷுக்கும், ஜோதிபென்னுக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நிலேஷ், ஜோதிபென் கழுத்தை போர்வையால் நெரித்து கொலைச் செய்துள்ளார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே ஜோதிபென் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல், தனது தாயாரைக் கொலைச் செய்தது குறித்து நிலேஷ் சமூக ஊடகத்தில், “அம்மா நான் உங்களைக் கொன்றுவிட்டேன். அதனால் என் வாழ்க்கையையே இழந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா. ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.


நிலேஷின் பதிவைப் பார்த்த அவரது உறவினர், இது குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக நிலேஷின் வீட்டுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஜோதிபென்னின் சடலத்தின் அருகே நிலேஷ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் நிலேஷை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், ஜோதிபென் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு மருந்துகள் கொடுப்பது வழக்கம். ஆனால், கடந்த சில நாள்களாக மருந்துகளை சாப்பிடாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ஜோதிபென்னின் மனநலம் மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், நிலேஷுக்கும், ஜோதிபென்னுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றி அவரை கத்தியால் குத்த முயன்றதாகவும், அப்போது அவர் நிலேஷை தடுத்ததாகவும், இதையடுத்து போர்வையால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் போலீசாரிடம் நிலேஷ் தெரிவித்துள்ளார்.

நிலேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜோதிபென்னின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மறுத்துள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.