உத்தர பிரதேசத்தில் 10-ஆம் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி, இப்போது அதற்காக வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பிராச்சி நிகம் (Prachi Nigam), சமீபத்தில் ஊடகங்களில் மிகவும் பிரபலமாக வலம்வந்த பெயர் இது.
உத்தரபிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது, 98.5 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
ஆனால், அவர் எடுத்த மதிப்பெண்ணுக்கு பாராட்டுக்களைப் பெறுவதற்கு பதிலாக, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களையும், கேலி கிண்டல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதற்கு அவள் முகத்தில் இருந்த முடிதான் காரணம். பிராச்சி தனது முகத்தில் இருக்கும் முடியால் கடுமையான கேலிகளை சந்திக்க வேண்டியிருந்தது.
அவரது கடின முயற்சியால் கிடைத்த வெற்றியும் கிண்டல்களுக்கு மத்தியில் காணாமல் போனது. இப்போது, அதனால் தான் அனுபவித்த மனக் கஷ்டங்களைப் பற்றி மாணவி பிராச்சி வெளிப்படையாக பேசியுள்ளார்.
தனக்கு முதல் இடம் கிடைத்திருக்கக்கூடாது என்று வருத்தப்படுவதாக அவர் கூறினார்.
“ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைந்தாலும் பரவாயில்லை. முதலிடம் பெறவில்லை என்றாலும், இரண்டாமிடம் அல்லது எதோ ஒரு இடம் கிடைத்தாலே போதும். அப்படி இருந்திருந்தால் என புகைப்படம் வைரலாகியிருக்காது. நான் சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்டிருக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.
இப்போது “அந்த எதிர்வினைகள் புண்படுத்துகின்றன. ஆனால் சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே சொல்வார்கள். எதையும் தடுக்க முடியாது” என்கிறார் பிராச்சி.
இதனிடையே, சமூக வலைதளங்களில் கடும் ட்ரோல்களுக்கு ஆளான பிராச்சிக்கு ஆதரவாக பலர் முன்வந்துள்ளனர். எக்ஸ் தளத்தில் ஒருவர் “நாம் ஒரு சமூகமாக தோற்றுவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
“அவளுடைய வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் இப்போது மிகவும் வேதனையான நினைவுகளாக மாறிவிட்டது. சமூக ஊடகங்கள் மிகவும் கொடூரமானது” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.