இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் குடும்ப வாழ்க்கையில் தொடர்ந்து சச்சரவு நீடித்த நிலையில், தனது 3 குழந்தைகளின் கண் எதிரே மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்வாயா கிராமத்தில் வசித்து வருபவர் ராஜூ. இவருக்கு சீமா என்ற மனைவியும், வன்சிகா (10), அன்சிகா (6), பிரயான்ஷ் (3) என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இதில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, சீமாவின் நடத்தையில் ராஜூவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சீமா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வந்ததால் இருவருக்குமான தகராறு அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது
இதன் காரணமாக சீமாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் ஆதரவு அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் அவருக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கின.
இதனால் ஏற்கெனவே மனைவி மீது சந்தேகம் கொண்ட ராஜுவுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக மீண்டும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது.
கோபத்தில் மனைவியை செங்கல்லால் தாக்கியுள்ளார். சீமா நிலை தடுமாறி கீழே விழுந்தாள். ஆனால் அப்போதும் ராஜு தன்னுடைய கோபத்தை அடக்க முடியாமல், தன் குழந்தைகளை கட்டாயப்படுத்தி தூங்க வைத்தார்.
ஆனால் குழந்தைகள் தூங்காமல் தலையணை இடைவெளியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் தனது மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றுள்ளார்.
மூன்று குழந்தைகளும் போர்வைக்கு பின்னால் இருந்து கொலையை பார்த்தனர். பின்னர், ராஜூ தனது செல்போன் மற்றும் மனைவியின் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ராஜூவை தேடி வருகின்றனர்.