ரூ.6600 கோடி Bitcoin மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, அவர் கணவரின் ரூ.97 கோடி சொத்துகள் பறிமுதல்!!

217

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது பணமோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. 2017-ம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்று வேரியபில் டெக் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் விளம்பரம் செய்து, பொதுமக்களிடமிருந்து ரூ.6,600 கோடி அளவுக்கு வசூலித்தது.

ஆனால் பொதுமக்கள் கட்டிய பணம் மோசடி செய்யப்பட்டது. இதனால் பிட் காயினில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்தனர். இந்த பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இம்மோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது. வேரியபில் டெக் நிறுவனத்தை நடத்தி வந்த அமித் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் ஏஜென்ட்டுகள்மீது டெல்லி மற்றும் மும்பையில் வழக்கு தொடரப்பட்டது.

உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜியிடமிருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. இன்னும் அந்த பிட்காயின் ராஜ் குந்த்ராவிடம் தான் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு ரூ.150 கோடி என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பிட்காயின் மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தி இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக இம்மோசடியில் தொடர்புடையவர்களாக கருதப்படும் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான 97.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.


இதில் ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் ஷேர்களை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்து இருக்கிறது.

ஷில்பா ஷெட்டி பெயரில் ராஜ் குந்த்ரா பிட்காயின் மோசடியில் கிடைத்த பணத்தை கொண்டு வீடு வாங்கியதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இவ்விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு நாடு முழுவதும் ரெய்டு நடத்தியது. சிம்பி பரத்வாஜ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ் மற்றும் மகேந்திர பரத்வாஜ் தலைமறைவாக இருக்கின்றனர்.