லாட்ரியில் 8 கோடி பரிசு வெற்றியாளரை ஏமாற்றி சீட்டை சொந்தமாக்கிய ஆசிய நாட்டவர்!!

204

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வெற்றிபெற்ற லொட்டரி சீட்டை ஏமாற்றி பணத்தை சொந்தமாக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருட்டு வழக்கு

குறித்த சம்பவத்தில் 23 வயதான மீர் படேல் என்ற இந்தியர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டு, தற்போது அவர் பொலிஸ் காவலில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில்,

உள்ளூர் நபர் ஒருவர் படேல் பணியாற்றும் கடைக்கு சென்று 40 டொலருக்கு வாங்கிய இரு லொட்டரி சீட்டுகளைக் கொடுத்து பரிசு கிடைத்துள்ளதா என்பதை பரிசோதிக்க கூறியுள்ளார்.

அதில் ஒரு சீட்டுக்கு 40 டொலர் பரிசாக கிடைக்க, அதை படேல் அந்த வாடிக்கையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இன்னொரு சீட்டுக்கு 1 மில்லியன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.37 கோடி தொகை பரிசாக கிடைத்துள்ளது.

ஆனால் அதை அப்படியே மறைத்த படேல், வெற்றிபெற்ற சீட்டை குப்பையில் வீசிவிட்டு, பரிசு விழவில்லை என ஏமாற்றியுள்ளார். அதை நம்பி அந்த வாடிக்கையாளரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.


டென்னசி மாகாணத்தைப் பொறுத்தமட்டில் 200,000 டொலர் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகை பரிசாக பெறுபவர்கள் Nashville தலைமையகத்தில் சென்று தொகையை பெற வேண்டும்.

அமெரிக்க லொட்டரி அமைப்பு குறித்து புரிதல் இல்லாத படேல், வாடிக்கையாளரிடம் இருந்து ஏமாற்றிய லொட்டரியுடன் 1 மில்லியன் டொலர் தொகையை கைப்பற்ற Nashville சென்றுள்ளார்.

1 மில்லியன் டொலர்

உண்மையில் அந்த லொட்டரியானது Murfreesboro பகுதியில் ஒரு எரிபொருள் நிலையத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுவான விசாரணையில் படேல் முரணான பதில்களை கூற, சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக தரவுகளை சமர்ப்பிக்க அதிகாரிகள் கோரியுள்ளனர்.

அத்துடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த லொட்டரி சீட்டின் உண்மையான வெற்றியாளர் படேல் அல்ல என்பதும் கண்கானிப்பு கமெரா பதிவுகள் உட்பட அனைத்து தரவுகளில் இருந்தும் உறுதியானது.

இதனையடுத்து படேல் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டுமின்றி, பொலிசார் உடனடியாக அந்த சீட்டுக்கு உண்மையான உரிமையாளரைக் கண்டுபிடித்து, 1 மில்லியன் டொலர் தொகைக்கு உரிமைக்கோர பணிந்துள்ளனர்.

பொலிசார் அந்த நபரை தொடர்புகொள்ளும் வரையில், தாம் வெற்றியாளர், படேலால் ஏமாற்றப்பட்டொம் என்பது அவருக்கு தெரியவில்லை என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.