வவுனியாவில் உழுந்து விளைச்சல் இல்லையெனில் இறக்குமதி!!

789

வவுனியா மாவட்டத்தில் 13 ஆயிரத்து 750 ஏக்கரில் உழுந்து செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவில் இம்முறை விளைச்சல் இல்லையெனில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகும் என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட மட்ட உழுந்து செய்கை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் அதிகளவில் உழுந்து செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான உதவிகளையும், ஆலோசனைகளையும் எமது திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களம் என்பன வழங்கி வருகின்றன.

இம்முறை எமது மாவட்டத்தில் காலபோகத்தில் 13 ஆயிரத்து 750 ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே உழுந்து செய்கை தொடர்பில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். உழுந்து செய்கையில் பாதிப்புக்கள் ஏற்படின் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாத வகையில் இழப்பீடு வழங்குவதற்கும் விவசாய காப்புறுதி சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு ஏக்கருக்கு 2250 ரூபாய் பணத்தை செலுத்தி காப்புறுதி செய்தால் உழுந்து செய்கைக்கு அறுவடை நேரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் இடத்து ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும்.