ஸ்ரீலங்காவில் குண்டுத் தாக்குதல் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்கிய புலனாய்வுப் பிரிவு…!

1062

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் சரியான தகவல்களை வழங்கியிருந்தனர்.

எந்த தேவாலயங்கள் என சரியாக குறிப்பிடாவிட்டாலும் இலங்கையில் தேவாலயங்களை இலக்கு வைத்து 6 பேர் தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தக் கூடும் என ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்களுக்கு முன்னர் இந்திய புலனாய்வு பிரிவினர், இலங்கை தேசிய புலனாய்வு சேவைக்கு அறிவித்திருந்தாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்துள்ள விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுதந்திர இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தனக்கு கிடைத்த புலனாய்வு தகவல்கள் அடங்கிய கடிதத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரிடம் காட்டி தாக்குதல் ஒன்று நடத்தப்படக் கூடும் என அவர்களிடம் கூறியதாகவும் வருண ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முற்பகல் சாட்சியமளித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் எம்.எம்.ஏ. கபூர், சஹ்ரான் இஸ்லாமிய மதம் மற்றும் திரு குர் ஆனை அவரது போதனைகள் மூலம் திரிபுப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் 2012 ஆம் ஆண்டு தினம் ஒன்றில் நுவரெலியாவில் வெளிநாட்டுக்குழு ஒன்று பௌத்த சமயத்தை திரிபுப்படுத்தி துண்டுப்பிரசும் விநியோகிக்கப்பட்டதாக கூறியுள்ள கபூர், அது தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அறிவித்து, அந்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கைத்தொழில் அபிவிருத்தி சபையின் விற்பனை முகாமையாளரான சரத் உதயசிறி இன்று இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான இந்த ஜனாதிபதி ஆணைக்குழு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட செயலகத்தில் இன்று கூடியது.

ஆணைக்குழு நாளைய தினமும் கூடி சாட்சியாளர்களிடம் விசாரணை நடத்தவுள்ளது.