திருமணம் செய்ய மறுத்த தனது அக்கா மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து மரத்தில் தூக்கில் விட்ட இளைஞர் ஐந்து நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாவட்டம், ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகா பைச்சவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதேஷ் பார்கி(35). இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை.
ஆனால், தனது அக்கா மகள் தீபா கோண்டி(21) என்பவரை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று மாலதேஷ் விரும்பினார். ஆனால், குடிப்பழக்கம் கொண்ட மாலதேஷை தீபாவிற்கு பிடிக்கவில்லை. அத்துடன் வயதும் கூடியவர் என்பதால் மாலதேஷை அவருக்குப் பிடிக்கவில்லை.
இந்த நிலையில், தனது அக்காவிடம் எப்படியாவது தீபாவை திருமணம் செய்து வைத்து விடு என்று தொடர்ந்து மாலதேஷ் வற்புறுத்தி வந்தார். அத்துடன் குடும்பத்தினருடன் இதே கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இதனால் தீபாவிற்கும், மாலதேஷ்க்கும் ஏப்ரல் 22-ம் தேதி நடத்துவது என்று குடும்பத்தினரால் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு மரத்தில் தீபாவின் உடல் தூக்கில் இறந்த நிலையில் இருந்தது. இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறித் துடித்தனர். திருமணம் பிடிக்காத காரணத்தால், தீபா தற்கொலை செய்து கொண்டதாக தீபாவின் குடும்பத்தினர் நினைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மாலதேஷ் தலைமறைவானது தீபாவின் குடுப்ம்பத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவர்கள், போலீஸாரிடம் இந்த விஷயத்தைக் கூறினர்.அதனால் மாலதேஷ் பார்கியை போலீஸார் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சியான தகவல் வெளியானது.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டாலும், என்னைப் பிடிக்கவில்லை என்று தீபா தொடர்ந்து கூறி வந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் அவருக்கு விஷம் கொடுத்து கொன்று மரத்தில் தூக்கில் தொங்க விட்டேன் என்று போலீஸாரிடம் மாலதேஷ் கூறியுள்ளார்.
இதனால், அவரை ஹானகல் போலீஸார் இன்று கைது செய்தனர். கொலை நடந்து ஐந்து நாட்களுக்குப் அபிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.