அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி அடித்து கொலை : சித்ரவதை செய்தது அம்பலம்!!

151

அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யச் சொல்லி சிறுமியின் உடம்பில் அயன்பாக்ஸ், சிகரெட் சூடுவைத்து, அடித்து சித்ரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைந்தகரை மேத்தா நகர், சதாசிவ மேத்தா தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நிஷாத் (35). இவர், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவரது வீட்டில், கடந்த 2 ஆண்டுக்கு முன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அருந்ததி (16) என்ற சிறுமியை வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளனர். இந்த சிறுமி, முகமது நிஷாத் வீட்டில் தங்கியிருந்து, வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், முகமது நிஷாத், தனது வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி, தீபாவளி பண்டிகையின்போது குளியல் அறையில் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக, கடந்த 2 நாட்களுக்கு முன், தனது வழக்கறிஞர் மூலம், அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, குளியல் அறையில் இறந்து கிடந்த சிறுமி சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர், முகமது நிஷாத்திடம் விசாரித்தபோது, ‘‘தீபாவளி அன்று குளிக்க சென்ற சிறுமி, நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்து கதவை தட்டினோம்.

நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால், பயந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சிறுமி தரையில் மயங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.

பின்னர், என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை பூட்டிவிட்டு, மனைவி நிவேதா மற்றும் குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டேன்,’’ என்று கூறியுள்ளார்.

ஆனால், சிறுமியின் உடலில் அங்காங்கே காயங்கள், சிகரெட் சூடு வைத்த காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து முகமது நிஷாத் மற்றும் அவரது மனைவி நிவேதா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

முகமது நிஷாத், அவரது சகோதரி உதவியுடன் அடையாறு பகுதியை சேர்ந்த சீமா (39) என்பவர் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய அருந்ததி என்ற சிறுமியை, கடந்த 2 ஆண்டுக்கு முன் தனது வீட்டு வேலைக்கு சேர்த்துள்ளார்.

இந்த சிறுமியின் தந்தை இறந்ததால் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், முகமது நிஷாத், தனது மனைவி நிவேதாவுடன் சேர்ந்து சிறுமிக்கு அதிகப்படியான வேலைகளை கொடுத்துள்ளார். செய்ய மறுத்தால், கடந்த 6 மாதங்களாக அடித்து, அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

முகமது நிஷாத்தின் நண்பரான எஸ்.கொளத்தூர் கோவிலம்பாக்கம் பகுதி சேர்ந்த லோகேஷ் (25), இவரது மனைவி ஜெயசக்தி (25) ஆகியோரும், வீட்டுக்கு வரும்போது எல்லாம் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், தீபாவளி தினத்தன்று காலை சிறுமியை முகமது நிஷாத், அவரது மனைவி நிவேதா மற்றும் நண்பரான லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி ஆகியோர் சேர்ந்து கொடூரமாக தாக்கி உள்ளனர்.

மேலும் அயன்பாக்ஸ் சூடு வைத்து, கொடூரமாக தாக்கியுள்ளனர். சிறுமி கதறி துடித்தபோதும் தொடர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, மூவரும் சேர்ந்து சிறுமியை குளியல் அறைக்கு இழுத்து சென்று போட்டுள்ளனர். சில மணி நேரம் கழித்து சென்று பார்த்தபோது சிறுமி இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, துர்நாற்றம் வெளியில் தெரியாமல் இருக்க, வீடு முழுவதும் ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு, முகமது நிஷாத் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், லோகேஷ் மூலம் வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து, சிறுமி மயங்கி விழுந்து இறந்ததாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, முகமது நிஷாத், அவரது மனைவி நிவேதா, நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா (39) மற்றொரு பணிப்பெண் மகேஸ்வரி (44) ஆகிய 6 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 6 மாதங்களாக சிறுமிக்கு கூடுதல் வீட்டு வேலைகளை கொடுத்ததும், சரிவர வேலை செய்யவில்லை, என சிறுமியை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததும் தெரியவந்தது.

மேலும், கைதான லோகேஷ் மீது கடந்த 2023ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனிடையே, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடலை அவரது குடும்பத்தினர் சொந்த ஊருக்கு எடுத்துசெல்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.

ஆனால், போதிய பண வசதி இல்லாததால் சென்னையிலேயே சிறுமிக்கு இறுதி சடங்கு நடத்த அண்ணாநகர் துணை ஆணையரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், அண்ணாநகர் உள்ள சுடுகாட்டில் சிறுமியின் உடலை அடக்கம் செய்யப்பட்டது.