“அப்பா தான் அம்மாவைக் கொலை செய்தார்” என்று தாயைக் கொன்ற தந்தையை போலீசாரிடம் எப்படி கொலைச் செய்தார் என்று படம் வரைந்து மகள் காட்டிக் கொடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் புத்தோலியா. மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த 2019ல் சோனாலி என்ற இளம்பெண்ணுடன் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தின் போது சந்தீப் சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதியிடமிருந்து ரூ.20 லட்சம் வரதட்சணையாகப் பெற்றார்.
ரூ.20 லட்சம் வரதட்சணையாக பெற்றுக் கொண்ட பின்னரும், சந்தீப் சோனாலியின் தந்தையிடம் தொடர்ந்து தனக்கு கார் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார்.
இது சோனாலியின் குடும்பத்திற்குள் பிரச்சனையை ஏற்படுத்தியது, பின்னர் போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். இதற்கிடையில், சோனாலிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் சந்தீப்பின் குடும்பத்தினர் ஆண் குழந்தை எதிர்பார்த்து இருந்துள்ளனர். பெண் குழந்தை பிறந்த பிறகு சோனாலியை மருத்துவமனையில் தனியாக விட்டு விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் ஒரு மாதத்திற்குப் பிறகு, சந்தீப் சோனாலியையும், தனது பெண் குழந்தையையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதைத் தொடர்ந்து சந்தீப்பின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மீண்டும் சோனாலியைத் துன்புறுத்தி வந்துள்ளனர்.
எனவே சோனாலி கணவர் வீட்டிலிருந்து புறப்பட்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். சோனாலியும் சந்தீப்பும் சுமார் 2 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சந்தீப் சமீபத்தில் சோனாலியை தன்னுடன் வாழ அழைத்தார். இதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் பேசி இருவரையும் ஒன்றாக இணைத்தனர்.
இந்த நிலையில், நேற்று, சந்தீப்பின் குடும்பத்தினர் சோனாலியின் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து, அவரது மகள் தாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சோனாலியின் பெற்றோர் சந்தீப்பின் வீட்டிற்குச் சென்று, தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வாக்குவாதம் செய்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சோனாலியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையில், சோனாலியின் 5 வயது குழந்தை தர்ஷிகா, தனது தந்தை சந்தீப், தனது தாய் சோனாலியைக் கொலைச் செய்து விட்டு, பின்னர் சோனாலி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அனைவரையும் ஏமாற்றியுள்ளார் என்று அழுதுக் கொண்டே கூறியது.
இது குறித்து போலீசார் விசாரித்தபோது, சந்தீப் சோனாலியைத் தாக்குவது போன்ற படத்தை தர்ஷிகா வரைந்து போலீசாரிடம் காட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில், சந்தீப் புடோலியாவை கைது செய்த போலீசார், அவரது தாய் வினிதா, சகோதரர் கிருஷ்ண குமார் புடோலியா, உறவினர் மனிஷா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.