ஆந்திர மாநிலத்தில்..
திருவள்ளூர் மாவட்டம் மாதர் பாக்கம் அருகே உள்ள பல்லவாடா கிராமத்தில் வசிக்கும் தம்பதியர் சுரேஷ் மற்றும் சிந்து. இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் அனீஸ் (7) இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். பல்லவாடா கிராமத்தில் வீட்டின் அருகே மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீடு திரும்பாத நிலையில், அவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் பாதிரிவேடு காவல் நிலையத்தில், தங்கள் மகன் மாயமானதாக கடந்த 17ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் பாதிரிவேடு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் அனீஸ் கடத்தப்பட்டாரா? எங்கு சென்றார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுவனை தேடி வந்தனர்.
மேலும், ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியிலும் தொடர்ந்து போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவன் மாயமான சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுவனை பல்லவாடா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி ரேகா தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதை பார்த்ததாக சிலர் தகவல் அளித்தனர்.
அதன் பேரில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுவனை கடத்தி கொண்டு சென்று ஆந்திர மாநிலம் வரதபாளையம் பகுதியில் கொலை செய்து புஜ்ஜி நாயுடு கண்டிகை அருகே பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி புதரில் வீசி சென்றது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி காளகஸ்தி போலீசார் வழக்குப் பகுதி செய்து பிரேத பரிசோதனைக்கு உடலை காளகஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேகாவிடம் நடத்திய விசாரணையில், பணம் பறிப்பதற்காக சிறுவனை கடத்தி சென்றதாகவும், தொடர்ந்து சிறுவன் அழுது அடம்பிடித்ததால் கொலை செய்து மூட்டையில் கட்டி வீசியதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார். சிறுவனை பணத்திற்காக கடத்தி கொலை செய்தாரா ?
அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்தாரா எனத் தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை செய்யப்பட்டு மூட்டையில் கட்டி வீசப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.