அவங்களைக் கொலை செய்யணும் என்ற எண்ணமே இல்லை ஸார்.. ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!!

236

பெங்களூருவில் வீட்டின் உரிமையாளரை கொலை செய்து தங்கநகையைத் திருடிய ரீல்ஸ் மோனிகா, போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36). கெங்கேரி புறநகர் சிவனபாளையத்தில் குருமூர்த்தி சலூன் கடை நடத்தி வந்தார்.

மே 10-ம் தேதி அவர் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி திவ்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். அத்துடன் அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இக்கொலைச் சம்பவம் குறித்து கெங்கேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திவ்யா வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மோனிகா மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனது காதலனுக்கு டாடா ஏஸ் வாகனம் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக திவ்யாவை கொலை செய்து தங்கச்சங்கிலியை திருடியதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.


பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்த மோனிகா சில மாதங்களுக்கு முன்பு தான், குருமூர்த்தி வீட்டில் அவர் வாடகைக்கு வந்துள்ளார். ரீல்ஸ் மோகம் கொண்ட மோனிகா, ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார். இதற்காக அவருக்குப் பணமும் அதிகம் தேவைப்பட்டுள்ளது.

அத்துடன் காதலனுக்கு வாகனம் வாங்கித் தரவும் பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவர் திவ்யா அணிந்திருந்த தங்கச்சங்கிலியை திருட முயற்சித்துள்ளார். இதற்காக திவ்யாவின் குழந்தையைப் பார்ப்பது போல வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

ஆனால், குளிக்கச் செல்லும் போது தங்கச்சங்கிலியை கழட்டி வைத்தால் திருடி விடுவது என்று மோனிகா தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். மே 10-ம் தேதி திவ்யா குளிக்கச் சென்ற போது அதைக் கண்காணித்து குளியலறைக்கு மோனிகா சென்றுள்ளார்.

ஆனால், தங்கச்சங்கிலியை திவ்யா கழட்டவில்லை. இதனால், அவரை பின்புறமாக கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்து விட்டு தங்கச்சங்கிலியை மோனிகா திருடியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,” மோனிகாவிடம் விசாரணை நடத்திய போது, ‘ நான் அவங்களைக் கொல்லணும்னு விரும்பல ஸார். என் காதலனுக்கு வாகனம் வாங்கித் தருவதற்காக தங்கச்செயினை திருடத்தான் சென்றேன்.

திவ்யாவை கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. அவரை கொலை செய்வதற்கு முன் இரண்டு, மூன்று முறை அவரது தங்கச்செயினைத் திருட முயன்றேன். ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை.

திவ்யாவின் கணவர், மாமியார் வேலைக்குச் சென்ற பிறகு மே 10-ம் தேதி எப்படியும் தங்கச்செயினைத் திருடி விட வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால், அவர் தங்கச்செயினை குளிக்கச் சென்ற போது கழட்டவில்லை.

அதனால் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு செயினை திருடி விற்றேன்’ என்று கூறினார். இதையடுத்து அருகில் இருந்த நகைக்கடையில் இருந்து தங்கச்செயின் மீட்கப்பட்டுள்ளது என்றனர்.

ஆடம்பர வாழ்விற்காக பெண்ணைக் கொலை செய்து நகையை இளம்பெண் கொள்ளையடித்த சம்பவம், பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.