ஆடு மேய்த்துக் கொண்டே படித்து மருத்துவ கனவை நனவாக்கிய தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்!!

215

ஒரே கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளனர்.

தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்த மாணவர்களில் ஒரு மாணவர் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டிலும், மற்றொரு மாணவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர்ந்து மருத்துவ கனவை நனவாக்கி வருகின்றனர்.

இதன்படி, கடந்த ஆண்டு 584 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 622 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் ஒரே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ரவி மற்றும் நாகராஜ் ஆகியோர் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர்.

இதில் நாகராஜ் என்ற மாணவர் மாற்றுத்திறனாளி ஆவார். இந்த மாணவர் ஆடு மேய்த்துக் கொண்டே படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். இவர், நீட் தேர்வில் 136 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது.


அதேபோல, ரவி என்ற மாணவர் நீட் தேர்வில் 592 மதிப்பெண் பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக அதே கல்லூரியில் தேர்வாகியுள்ளார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் தருண் என்ற மாணவர் 633 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.