“ஆதாரத்தைக் காட்டுறேன்.. என்னை அசிங்கப்படுத்தாதீங்க…” 52 ஆண்களை காதலித்து ஏமாற்றிய பெண் கதறல்!!

304

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். மாட்டு தீவன விற்பனை நிலையம் நடத்தி வந்த இவருக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானவர்தான் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா. செல்போன் எண்ணை பரிமாறியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் காதல் மழை பொழிந்த சத்யா, அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை அரங்கேற்றினார்.

தனது திருமணத்தை பார்ப்பதற்காக, தாய் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், தற்போது தாய் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் மகேஷ் அரவிந்துக்கும், சத்யாவுக்கும் பழனி அருகே உள்ள கோயிலில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் தீவிர முயற்சி எடுத்தார்.

தனக்கு வரப்போகும் மருமகளுக்கு சேர்த்து வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகளை, மகேஷின் தாயார், சத்யாவுக்கு கொடுத்தார். இதைத் தொடர்ந்து திருமண வாழ்க்கையில் இணைந்த பின்புதான் சத்யாவின் அந்தரங்கம் அதிர்ந்து போக செய்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் அருண் என்பவரை திருமணம் செய்த சத்யா, கணவரிடம் சண்டையிட்டு பிரிந்தவர் ஆவார். முதல் திருமணத்துக்கு பிறகு அடுத்தடுத்த இளைஞர்களிடம் பேசிப் பழகிய சத்யாவுக்கு பணத்தாசை உருவானது.


முதலில் சமூகவலைதளங்கள், மேட்ரிமோனி செயலிகள் மூலம் வேவு பார்க்கும் சத்யா, திருமணமாகாத முதிர்கண்ணன்களை குறி வைத்து பேசுவது, போலியான முகவரி, போலியான தாய் தந்தையை அறிமுகப்படுத்துவது, அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை நடத்துவது, திருமணத்துக்கு பின்பு கணவனை வேண்டுமென்றே கோபப்படுத்தி விவாகரத்து வரை கொண்டு செல்வது, இறுதியாக கணவரிடம் கணிசமாக பணத்தைப் பெற்றுக் கொண்டோ, அல்லது திருடிக் கொண்டோ தப்பியோடுவது சத்யாவின் கைவந்த கலை.

தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் மட்டுமல்லாமல் கரூரைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர், கொடுமுடியைச் சேர்ந்த மாட்டு வியாபாரியின் மகன், தொழிலதிபர், அரசியல்வாதி, பேக்கரி ஓனர், ஆடு மேய்ப்பவர் வரையிலும் சத்யாவின் வேட்டை தொடர்ந்தது.

திருமணத்துக்கு பின்பு தகராறை தொடங்கும் சத்யா, அடுத்த காதலனை வைத்து, தற்போதைய கணவருக்கு கொலை மிரட்டல் விடுப்பது வாடிக்கை. இதே போல சத்யாவின் திருட்டுத் தனம் குறித்து மகேஷ் அரவிந்த் கேட்டதற்கு, நான் மைனராக இருக்கும் போதே திருமணம் செய்தவள் என்றும், என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கொலை மிரட்டல் விடுத்த கொடுமுடி சத்யா தலைமறைவானார்.

இந்த கல்யாணராணி சத்யாவின் லீலைகள் குறித்து மகேஷ் அரவிந்த் அளித்த தகவலின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய நிலையில் அவர் குறித்த மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி ட்ரெண்டானது.

மேலும் குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சத்யாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூரில் இருந்து தப்பியோடி புதுச்சேரியில் பதுங்கியிருந்த சத்யாவை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் ஜூலை 14-ம் தேதியன்று விசாரணைக்காக சத்யா காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் பக்கம் திரும்பிய சத்யா, நான் வெளியே வந்தவுடன் எல்லா ஆதாரங்களையும் காட்டுகிறேன் என்றும், தேவையில்லாமல் என்னை அசிங்கப்படுத்த வேண்டாம் என்றும் ஆவேசமாக கூறினார்.

8 வயதில் குழந்தை உள்ள நிலையிலும், இதுவரை 15 பேரை திருமணம் செய்ததோடு, 40-க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்வதாக நம்ப வைத்து மோசடி செய்த சத்யா தற்போது கைதான நிலையில், இடைத்தரகர் தமிழ்ச்செல்விக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். தமிழ்ச்செல்வி சிக்கிய பின்னரே, சத்யாவின் மற்ற காதல் கதைகளும், கல்யாண மோசடிகளும் தெரியவரும் என்கிறது காவல்துறை வட்டாரம்.