இந்தியா இதேபோன்று நடந்து கொண்டால் சீனாவில் இருந்து மட்டுமல்ல பாகிஸ்தான், நேபாளத்திலிருந்தும் ராணுவ அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் எச்சரித்துள்ளது. இந்திய எல்லையில் கடந்த திங்கட்கிழமை சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் 35க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சீன அரசும் அதன் ஊடகமும் தொடர்ந்து இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில் பேசி வருகின்றன.
அதாவது பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகள் சீனாவின் புதிய கூட்டாளிகளாக உருவாகியுள்ள நிலையில், சீன நாளேடு இந்தியாவை எச்சரிக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சீனா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் ஒரேநேரத்தில் எல்லை மோதல்களில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இந்தியா எல்லை பதற்றத்தை அதிகரித்தால் அது பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளின் ராணுவ அழுத்தத்தையும் எதிர்கொள்ள நேரிடும் அல்லது மும்முனை தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும், இவை இந்திய ராணுவத் திறனுக்கு அப்பாற்பட்டது. இது இந்தியாவுக்கு பேரழிவு தரக்கூடிய தோல்விக்கு வழிவகுக்கும், எல்லை நிலைமைகளை மாற்றுவதற்கு சீனாவிற்கு எந்த எண்ணமும் இல்லை, இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் சீன எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன துருப்புகளுடன் ஏற்பட்ட வன்முறை மோதலின்போது கர்னல் அதிகாரி உள்ளிட்ட 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்தியா முழு விசாரணை நடத்த வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் இந்திய தரப்பில் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்பதை இந்தியா உறுதி செய்யவேண்டும், தற்போதைய நிலைமையை இந்தியா தவறாக மதிப்பிடக்கூடாது என குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட ஒரு ராணுவ நிபுணர், எல்லையில் ஏற்பட்டுள்ள மோதலில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை சீனா வெளியிடாததற்கு காரணம், அந்த தகவல் இரு நாடுகளிலுள்ள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால்தான் அதை சீனா வெளியிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளதாக அந்த நாளேடு தெரிவித்துள்ளது.
ஏனெனில் எந்த ஒரு உயிரிழப்புகளையும் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் ஒப்பிடுகையில் அது இருநாட்டிலும் தேசியவாத உணர்வை தூண்டுமே தவிற அது ஒருபோதும் பதற்றத்தை தணிக்க எந்த வகையிலும் உதவாது எனவும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.