மான்செஸ்டரில் வாழும் இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் இனி யாரும் நுழையக்கூடாது என பிரித்தானிய நீதிபதி ஒருவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்… காரணம்? ஆகத்து மாதம் 15ஆம் திகதி மான்செஸ்டரில் உள்ள வீடு ஒன்றில் சட்ட விரோதமாக பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கூட்டம் கூடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ள நிலையிலும், அந்த வீட்டில் சுமார் 200 பேர் கூடி பார்ட்டி நடத்தியுள்ளனர்.
பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் பார்ட்டியை நிறுத்த முயல, வீட்டுக்குள்ளிருந்து பலர் பல பொருட்களைத் தூக்கி பொலிசார் மீது எறிந்ததால் பொலிசார் வேறு வழியின்றி பின்வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிரச்சினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பார்ட்டியை நடத்தியவர் அந்த வீட்டின் சொந்தக்காரரான Charlene Proham (27) என்ற இளம்பெண் என்பது தெரியவர, அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்தியதோடு, பொலிசாருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தியதால், உங்கள் வீட்டை மூட உத்தரவிடுகிறேன் என்று கூறியுள்ளார் நீதிபதி.
அதன் பொருள் என்னவென்றால், இனி யாரும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு Charlene வீட்டுக்குள் நுழையக்கூடாது. அப்படி தடையை மீறி யாரவது Charlene வீட்டுக்குள் நுழைந்தால், Charlene சிறை செல்ல நேரிடும்.
அத்துடன் Charleneக்கு 100 பவுண்டுகள் அபராதமும் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த தீர்ப்பால் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை உள்ளதா என Charleneஐக் கேட்க, அவர், டைமென்ஷியா பிரச்சினையால் அவதியுறும் என் தாய் Hulme என்ற இடத்தில் வசித்துவருகிறார், அவரை நான்தான் கவனித்துக்கொள்கிறேன் என்றார்.
அப்படியானால், நீங்கள் உங்கள் தாய் வீட்டுக்கு சென்று அவரை கவனித்துக்கொள்ளலாம், ஆனால் அவர் உங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்று கூறினார் நீதிபதி. அந்த வீட்டில் நூற்றுக்கணக்கானோர் பார்ட்டியில் பங்கேற்கும் வீடியோக்கள் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால், தான் 20 பேரை மட்டுமே பார்ட்டிக்கு அழைத்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் வருவார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார் Charlene.