இன்ஸ்டா காதலனுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!

178

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களைச் சந்தித்துக் காதலிப்பது அதிகரித்து வருகிறது. இப்படி சமூக வலைதளங்களில் கிடைக்கும் காதலுக்காக இனம், மதம், மொழியைத் துறந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இவ்வாறு காதலுக்காக நாட்டை விட்டு வெளியேறிய இந்தியப் பெண் ஒருவர் போலியான ஆவணங்களைக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் சனம் கான். அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து அவரது கணவர் அவருடன் வாழ மறுத்துவிட்டு சொந்த ஊரான தானேக்குத் திரும்பினார். இதற்கிடையில், இன்ஸ்டாகிராம் மூலம் பாகிஸ்தானிய நபரை அந்த பெண் சந்தித்தார், பின்னர் அவரை காதலித்தார்.

கடந்த ஆண்டு தனது காதலனை சந்திக்க தனது இரண்டு குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். ஒரு மாத விசாவில் பாகிஸ்தானுக்குச் சென்ற அவர், காதலனைச் சந்தித்த பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆறு மாதங்கள் அங்கேயே இருக்க முடிவு செய்து விண்ணப்பித்தார். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து நாடு திரும்பிய அவர், போலி ஆதார் அட்டை, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை தயாரித்து, போலியான பெயரில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.


இதனால், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டின் போலீஸ் சரிபார்ப்பை முடித்துவிட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் சென்றார். இந்த நிலையில்தான் அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது.

அதன் பிறகு, பாகிஸ்தானில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தங்கியிருந்த அவர், உடனடியாக நாடு திரும்பினார். பின்னர், மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்ல விசாவை நீட்டிக்க முயன்றபோது, ​​ஏஜென்சி நடத்திய விசாரணையில் அவர் போலி ஆவணங்களைக் கொடுத்தது தெரியவந்தது.

மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்க பெண்ணுக்கு உதவிய தொழிலதிபர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.