இங்கிலாந்தில்..
19 வயதேயான இளம்பெண் ஒருவர், இங்கிலாந்து நாட்டில் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண்ணைக் கொலைச் செய்ததாக அவரது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள குரோய்டனில் அமைந்துள்ள வீட்டிற்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணியளவில் போலீசார் அழைக்கப்பட்டார்கள். ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த போலீசார், அந்த வீட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர், கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்த பெண் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜோகி சீமா என்னும் கிராமத்தைச் சேர்ந்த மேஹாக் ஷர்மா (19) என்பது தெரியவந்தது. இவருக்கும் நியூ சாந்த் நகரை சேர்ந்த சாஹில் ஷர்மா (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி திருமணம் ஆகியுள்ளது. திருமணமான 5 மாதங்களில் மாணவர் விசாவில் லண்டன் வந்துள்ளார் மேஹாக். பின்னர் பணி விசா பெற்ற அவர்,
தனது கணவரான சாஹிலுக்கு கணவர் மனைவி விசா ஏற்பாடு செய்து அவரை லண்டனுக்கு வரவழைத்துள்ளார். இந்த நிலையில்தான் மேஹாக்கும் சாஹிலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாஹில் மேஹாக்கை கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சாஹில் ஷர்மாவை கைது செய்து ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள மேஹாக் தாய் மதுபாலாவுக்கு உறவினர்கள் மூலம் மகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு துடிதுடித்துப் போயிருக்கிறார். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், தன் மகளுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்னை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.