இறந்த தாயின் உடலை புதைக்க பணமில்லை.. வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்த மகன்!!

125

கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் உள்ள வெண்ணலையைச் சேர்ந்தவர் அல்லி. 72 வயதான இவருக்கு பிரதீப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் குடும்பத்துடன் காக்கநாட்டில் வசித்து வருகிறார்.

பிரதீப் குடிப்பழக்கம் உள்ளதால், பிரதீப்பின் மனைவி மகனுடன் வேறு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அல்லி தனது மகன் பிரதீப்புடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. பிரதீப் அப்பகுதியில் டயர் கடை நடத்தி வந்தார்.

குடிபோதையில் அக்கம்பக்கத்தினருடன் பிரதீப் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், அவர்கள் யாரும் பிரதீப்பின் குடும்பத்தினரிடம் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அல்லியின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே, பிரதீப் தனது தாயை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன், குடிபோதையில் பிரதீப், இறந்த தனது தாயை அடக்கம் செய்வதற்காக, தனது வீட்டின் முற்றத்தில் குழி தோண்டி உள்ளார்.


இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அல்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பிரதீப்பிடம் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு கூட அக்கம்பக்கத்தினர் உதவவில்லை.

மேலும், உடலை அடக்கம் செய்ய என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் எனது தாயின் உடலை வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்தேன் என பிரதீப் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.