தஞ்சாவூர்..
தமிழகத்தில் வேலைக்கார பெண்ணே, உரிமையாளரை கொலை செய்துவிட்டு, இறுதிச்சடங்கில் அனைத்து வேலைகளையும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் செய்கிறார் தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி(65). இவரின் கணவர் சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார்.
இதையடுத்து இவர் தன்னுடைய மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் இரயில்வே துறையில் டிடிஆர்-ஆக வேலை செய்வதால், கடந்த 15-ஆம் திகதி மகன் வேலைக்காக மதுரை சென்றுள்ளார்.
அப்போது ஜாக்குலின் மேரியை வேலைக்கார பெண் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16-ஆம் திகதி பிராங்கிளின் தனது தாய் ஜாக்குலின் மேரியின் போனுக்கு தொடர்பு கொண்ட போது, அவர் போனில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.
வெகு நேரமாகியும், தாய் போன் எடுக்காத காரணத்தினால், அவர் உடனடியாக அருகில் இருக்கும் வீட்டாருக்கு போன் செய்து, தன்னுடைய அம்மாவிடம் சென்று போனை கொடுக்கும் படி கூறியுள்ளார்.
அப்போது அவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது, ஜாக்குலின் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பிராங்கிளினுக்கு தெரிவிக்க, அவர் தஞ்சைக்கு விரைந்துள்ளார்.
அவர் தாய்க்கு, காக்கா வலிப்பு நோய் இருப்பதால் அதனால் உயிர் இழந்திருக்ககூடும் என்று கூற, பொலிசார் இதை ஒரு மர்ம மரணம் என்று வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
ஆனால், இறுதிச்சடங்கின் போது, அவர் தாய் அணிந்திருந்த செயின், வளையல் ஆகியவை காணமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிராங்கிளின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, அதன் பின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானதால், அவருடன் இருந்த வேலைக்கார பெண்ணான ஆரோக்கிய டென்சியிடம் பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்ட போது, ஜாக்லினை ஐந்தரை பவுன் நகைக்காக கொலை செய்ததாகவும்,
அவரது தொலைபேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும், இது குறித்து யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இறுதிச்சட்ங்கில் அனைத்து வேலைகளை ஓடி ஓடி செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து, இதை கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார், ஆரோக்கிய டென்சியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.