இளம்பெண்ணுடன் பழகியவர்களே கொலை செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

267

ஆசைநாயகிக்காக நகையைத் திருட ஆசைப்பட்டு, நட்பாக பழகி வந்த இளம்பெண்ணை, மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் பழகியவர்களே கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா. பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்னான கவிதா, தன்னுடைய கணவரை இழந்த நிலையில், சக்கிமங்கலம் அருகே உள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் தனியாக தங்கியிருந்தார். இவருடைய மகள் உசிலம்பட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் உசிலம்பட்டியில், தனது வீட்டிற்குள்ளேயே கவிதா கை, கால்கள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிலைமான் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கவிதா கொலை செய்யப்பட்டதுடன், அவர் அணிந்திருந்த 10 சவரன் மதிப்பிலான செயின், மோதிரம், கம்மல் மற்றும் செல்போன் ஆகியவையும் திருடப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை நகைக்காக நடந்தது என்பதை உறுதி செய்த போலீசார், மேல் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, கவிதாவின் வீட்டருகே வசிக்கும் சிவானந்தம் என்ற இளைஞரும், கலையரசி என்ற பெண்ணும் திடீரென வெளியூர் கிளம்பிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.


இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் இருவர் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர். அப்போது, கலையரசிக்கும் சிவானந்தத்துக்கும் தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.

கணவனை இழந்து தனியாக வசித்து வந்த கவிதாவை, கலையரசியும் சிவானந்தமும் அடிக்கடி தனியாக வீட்டில் சந்தித்துப் பேசி வந்திருக்கிறார்கள். மேலும், கலையரசி சிவானந்தத்திடம் தனக்கு நகை வேண்டும் என நச்சரித்து வந்திருக்கிறார்.

இதனால் இருவரும் திட்டமிட்டு, கவிதாவை கொன்று விட்டு நகை உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு வெளியூருக்குச் சென்றது விசாரணையில் அம்பலமானது. விசாரணைக்குப் பின் கலையரசியையும் சிவானந்தத்தையும் வரவழைத்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.