தனது தந்தையுடன் சென்றுக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் நிறுத்தி, வாலிபர் ஒருவர் கட்டாயத் திருமணம் செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் தொகுதியில் நடுரோட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம், அடுத்து வரும் தலைமுறையினரின் எதிர்காலம் குறித்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைப் பார்க்கும் இளம்பெண் ஒருவர், தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கிறார்.
நடுரோட்டில் அந்த இருசக்கர வாகனத்தை இரண்டு இளைஞர்கள் நிறுத்துகிறார்கள். அதில், முகத்தை துணியால் மறைத்த வாலிபர் ஒருவர், வலுக்கட்டாயமாக தந்தையுடன் இருக்கும் இளம்பெண்ணின் நெற்றியில் குங்குமத்தை பூச முயல்கிறார். அவரிடமிருந்து தனது மகளைக் காப்பாற்ற தந்தை முயற்சி செய்கிறார்.
அந்த ஆசிரியையும் சேலையால் தனது நெற்றியை மறைக்கிறார். ஆனால், அதை மீறி அந்த ஆசிரியையின் நெற்றியில் வாலிபர் குங்குமம் பூசுகிறார். இதை மற்றொரு இளைஞர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து, அந்த இளைஞன் மீது ஆசிரியை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதில், “பாபங்காமாவைச் சேர்ந்த சவுரப் சோனு என்ற இளைஞர் தொடர்ந்து என்னிடம் தொலைபேசியில் துன்புறுத்துகிறார். அமர்பூரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிய தொடங்கியதில் இருந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்.
அவர் மீது இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், இதனால் போலீசார் அவரை அழைத்து எச்சரித்த போதிலும், அவர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தனது புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.