இளைஞரின் அலைபேசியில் இருந்து தந்தைக்கு வந்த அழைப்பு: 3 நண்பர்கள் கொலையில் விலகாத மர்மம்!!

909

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மூன்று நெருங்கிய நண்பர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த பகுதியை ஆய்வுக்கு உட்படுத்திய பொலிசார், இது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா ஏரியில் மீன் பிடிக்க செல்ல முடிவு செய்து வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் ஒரே இடத்தில் ஒன்று கூடியுள்ளனர் நெருங்கிய நண்பர்களான டேமியன் டில்மேன்(23), கெவன் ஸ்பிரிங்ஃபீல்ட்(30), மற்றும் பிராண்டன் ரோலின்ஸ்(27) ஆகிய மூவரும்.

இந்த நிலையில் அலைபேசியில் தமது தந்தையை தொடர்பு கொண்ட ரோலின்ஸ் உதவுங்கள் என மட்டும் கூறியுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட அவர் மகனும் நண்பர்களும் ஆபத்தில் சிக்கியிருக்கலாம் என கருதி உடனடியாக ஏரியை நோக்கி விரைந்துள்ளார். சில நிமிட போராட்டங்களுக்கு பின்னர் தமது மகனையும் நண்பர்களையும் காண நேர்ந்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.


ஸ்பிரிங்ஃபீல்ட் மற்றும் டில்மேன் ஏற்கனவே இறந்துவிட்டனர். ரோலின்ஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடியபடி இருந்துள்ளார். இதனிடையே அவசர உதவிக்குழுவினர் மற்றும் பொலிசார் சம்பவப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் ரோலின்ஸ் இறந்திருந்தார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்த மூவரும் கொடூரமாக தாக்கப்பட்டு, அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

எஞ்சிய இரு நண்பர்களுக்கு முன்னரே டில்மேன் ஏரிக்கு சென்றுள்ளார். அவரை ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒன்றிணைந்து தாக்கியிருக்கலாம் எனவும் பின்னர் கொன்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் பொலிசார் கூறுகின்றனர். இதனிடையே, மறைந்திருந்த சந்தேக நபர்கள், இன்னொரு வாகனத்தில் வந்த ரோலின்ஸ் மற்றும் ஸ்பிரிங்ஃபீல்டை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இருப்பினும் குற்றுயிராக இருந்த ரோலின்ஸ் தமது தந்தையை அழைத்து உதவி கோரியுள்ளார். இதனாலையே இந்த சம்பவம் உடனடியாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்கின்றனர் பொலிசார். மேலும், ரோலின்ஸ் தமது தந்தையிடம் நடந்தவற்றை கூறியதாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில், குற்றவாளிகளை கைது செய்ய உதவும் நபருக்கு 5,000 டொலர் சன்மானம் அளிக்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.