உடனிருந்து, பழகி போட்டுக்கொடுத்த பெண்.. குற்றப் பின்னணிகொண்டவரின் கொலை வழக்கில் சிக்கிய ஸ்பா ஓனர்!!

168

மும்பை விலே பார்லே பகுதியில் போலீஸாக நடித்து, மிரட்டிப் பணம் பறித்துக்கொண்டிருந்த குரு வாக்மாரே என்ற கிரிமினல் கடந்த வாரம் மும்பையில் அதிகாலையில் மசாஜ் சென்டரில் படுகொலைசெய்யப்பட்டார்.

அவரை இரண்டு பேர்கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. எனினும், வாக்மாரேயுடன் இருந்த பெண்ணை அந்தக் கும்பல் எதுவும் செய்யவில்லை. இந்தப் படுகொலையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே பெரோஸ், சாதிக் அன்சாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அதோடு வாக்மாரேயுடன் இருந்த பெண்ணும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் மேரி என்று தெரியவந்திருக்கிறது. போலீஸார் நடத்திய விசாரணையில், மேரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் வாக்மாரேயுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது தெரியவந்தது.

மேரி வந்ததும், வாக்மாரேயையும் முற்றிலும் மாற்றியிருக்கிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்மாரே மேரி சொன்னபடி நடந்துகொண்டிருக்கிறார். யாரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லாத வாக்மாரே, மேரியை மட்டும் தனது சொந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

மேரி இரண்டு நாள்கள் வாக்மாரே வீட்டில் தங்கியிருந்து வாக்மாரே குறித்த அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொண்டார்.


மேரியை வாக்மாரே காதலிப்பது, அவரின் மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. மேரியை வாக்மாரே கண்மூடித்தனமாகக் காதலித்திருக்கிறார் என்கிறார்கள். அதோடு மேரியைத் தன் சொந்த கிராமத்துக்கும் அழைத்துச் சென்று அனைத்தையும் காண்பித்திருக்கிறார்.

இதன் மூலம் வாக்மாரே குறித்த அனைத்துத் தகவல்களையும் மேரி தெரிந்துகொண்டிருக்கிறார். மேரியைப் பயன்படுத்தி, வாக்மாரே பற்றிய தகவல்களையும், அவர் எங்கு செல்கிறார், வருகிறா போன்றவற்றையும் கொலைசெய்த கும்பல் தெரிந்துகொண்டது.

அதோடு வாக்மாரேயைப் பல சந்தர்ப்பங்களில் கொலைசெய்ய முயற்சி செய்து, அது தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்தக் கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்த `சாஃப்ட் டச் ஸ்பா’ எனப்படும் மசாஜ் சென்டர் உரிமையாளர் சந்தோஷ் ஷெரேகரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

வாக்மாரே, சந்தோஷிடம் அடிக்கடி மிரட்டிப் பணம் பறித்துவந்திருக்கிறார். அந்த மிரட்டலிலிருந்து விடுபட வாக்மாரேயைக் கொலைசெய்ய முடிவுசெய்து பெரோஸை அணுகியிருக்கிறார். பெரோஸும் ஸ்பா நடத்திவருகிறார்.

அந்த வகையில் இருவருக்குமிடையே நட்பு இருந்தது. அந்த நட்பைப் பயன்படுத்தி பெரோஸிடம் தனது பிரச்னையைச் சொல்லி, வாக்மாரேயைக் கொலைசெய்யும்படி சந்தோஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து, இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறுகையில்,”சந்தோஷ் வாக்மாரேயைக் கொலைசெய்ய ஆரம்பத்தில் முன்பணமாக பெரோஸிடம் ரூ.2 லட்சம் கொடுத்திருக்கிறார். உடனே பெரோஸ் டெல்லியில் வசிக்கும் சாதிக் அன்சாரியைத் தொடர்புகொண்டு வரவைத்திருக்கிறார்.

அவர்கள் இருவரும் வாக்மாரேயின் நடவடிக்கையைத் தொடர்ந்து கண்காணித்துவந்திருக்கின்றனர். வாக்மாரேயின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள மேரியை வாக்மாரேயிடம் அனுப்பி, அவருடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளச் செய்திருக்கின்றனர்.

மேரியும் வாக்மாரேயிடம் நெருங்கிப் பழகி வாக்மாரே எங்கெல்லாம் செல்கிறார் என்பது குறித்த அனைத்துத் தகவல்களையும் பெரோஸிடம் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில் வாக்மாரேயை அவரின் பிறந்தநாளில் கொலைசெய்யத் திட்டம் தீட்டினர்.

ஆனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. வாக்மாரே, தனது பிறந்தநாளையொட்டி சயான் பீர் பாரில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தபோது கொலை செய்ய முடிவுசெய்து இருவரும் அங்கு வந்தனர். வாக்மாரே, மசாஜ் சென்டர் ஊழியர்கள் சிலருக்கும் சேர்த்து பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

பீர் பாரில் குடித்துவிட்டு மசாஜ் சென்டருக்குச் சென்று மது அருந்த முடிவுசெய்து, வாக்மாரே மசாஜ் சென்டர் ஊழியர்களுடன் சென்றிருக்கிறார். ஒர்லியிலுள்ள மசாஜ் சென்டரில் மது அருந்திவிட்டு மசாஜ் சென்டர் ஊழியர்கள் சென்ற பிறகு வெளியில் காத்திருந்தவர்கள் உள்ளே வந்து வாக்மாரேயைக் கொலைசெய்திருக்கின்றனர்.

இதற்காக சந்தோஷ் மொத்தம் 12 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். அதில் சாதிக் அன்சாரிக்கு 6 லட்சத்தை பெரோஸ் கொடுத்திருக்கிறார். துப்புக் கொடுத்த மேரிக்கு எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விவரத்தை இருவரும் கூற மறுக்கின்றனர்.

இதனால் மேரி துப்புக் கொடுக்க எவ்வளவு வாங்கினார், யாரிடமிருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரித்துவருகிறோம்”என்றார்.

வாக்மாரே, தனது உடம்பில் 20 பேரின் பெயர்களை டாட்டூ மூலம் எழுதியிருக்கிறார். `கஜினி’ பட சூர்யா போன்று எழுதிவைத்திருந்தார். அதிலிருந்த நபர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.