இந்திய மாநிலம் கர்நாடகாவில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் நகரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜூ (24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.
இவர்களது காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. குறித்த மாணவியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் கல்லூரி மாணவியான சிறுமி தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவரும் காதலர் ராஜூவும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் விஷம் அருந்திவிட்டு, ஹேமாவதி ஆற்றுப்பாலம் வழியாக செல்லும் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டனர்.
அப்போது பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு ராஜூ சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சிறுமி தொடர் சிகிச்சையில் உள்ளார். பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.