“எங்ககிட்ட அவ்வளவு காசு இல்ல சார்”.. 12 வருஷமா வேதனையுடன் தவித்த சிறுமி : நடந்த அதிசயம்!!

594

பாகிஸ்தான்..

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் அஃப்ஷீன் குல். இவர் 10 மாத குழந்தையாக இருந்தபோது துரதிஷ்ட வசமாக ஏற்பட்ட விபத்தில் இவருடைய கழுத்து 90 டிகிரிக்கு திரும்பிவிட்டது. உடனடியாக மருத்துவர்களிடம் தனது மகளை அழைத்துச்சென்றுள்ளனர் சிறுமியின் பெற்றோர். ஆனால், நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது. சிகிச்சைக்கு பணம் இல்லாததால் பெற்றோர்கள் தவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமிக்கு பெருமூளை வாதமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கல்விகற்க முடியாத சூழ்நிலைக்கு சிறுமி தள்ளப்படவே பெற்றோர்கள் கலங்கிப்போயினர். 12 வருடங்களாக இந்த சிரமங்களுடன் சிறுமி போராடி வந்த நிலையில், ஆன்லைன் மூலமாக சிகிச்சைக்கு பணம் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நல்ல மனம் கொண்டோர் அஃப்ஷீனின் நிலையை கண்டு பணம் அளிக்கவே, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமி மற்றும் அவரது சகோதரர் யாக்கூப் ஆகியோர் இந்தியா வந்திருக்கின்றனர். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர் ராஜகோபாலன் கிருஷ்ணன் கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்படவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.


அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் சிறுமிக்கு முக்கிய அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. 6 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது. இதனால் சிறுமி அஃப்ஷீன் தற்போது பேச துவங்கியுள்ளதாக ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார் யாக்கூப்.

இதுபற்றி அவர் பேசுகையில்,”அறுவை சிகிச்சையின்போது சிறுமியின் இதயம் அல்லது நுரையீரல் நின்றுபோகலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், நல்லபடியாக சிகிச்சை முடிவடைந்தது. அஃப்ஷீன் எங்களுடைய தேவதை. தற்போது அவளால் சிரிக்கவும் பேசவும் முடிகிறது. மருத்துவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நாங்கள் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.

சிறுமிக்கு இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் மருத்துவர் ராஜகோபாலன் கிருஷ்ணன். மேலும், ஒவ்வொரு வாரமும் ஸ்கைப் மூலமாக சிறுமி அஃப்ஷீனின் உடல்நிலை குறித்து அவர் விசாரித்துவருகிறார். இதனிடையே பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.