தமிழகம் முழுவதும் நேற்று12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர். தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருந்தது.
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் கவலை கொள்ள வேண்டாம் மறுதேர்வு எழுதி உடனடியாக உயர்கல்வி பயிலலாம் என முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் வைரவன்கோவிலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் ஜெயவேலின் மகள் சௌமியா. இவர் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து தேர்வு எழுதினார். நேற்று முடிவுகள் வெளியான நிலையில் சௌமியா எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனவருத்தத்தில் இருந்தார்.
இதனால் மாணவி சௌமியா யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை பூசேரியில் வசித்து வருபவர் சத்யா. இவர் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாக கருதிய சத்யா மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சத்யா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருவேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மாணவர்களிடையே பெரும் சோகமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.