என்னை மன்னிசுடுங்க… தெரியாமல் பண்ணிட்டேன்! இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் மகன்!!

890

இந்து கடவுளான துர்கா தேவியின் படத்தை அவமதிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாக இஸ்ரேல் பிரதமரின் மகன் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நேட்டன்யாஹூ உள்ளார். இவரது இளைய மகன் யெய்ர். 29 வயதான இவர் சமூக வலைதள பயன்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

தனது தந்தையின் அரசியல் கொள்கைகள் குறித்தும், எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தை மீதான ஊழல் வழக்கு விசாரணையில் எதிர்க்கட்சிகளை சாடும் விதமாக இந்து கடவுளான துர்கா தேவியின் படத்துடன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.


அந்தப் படத்தில் துர்கா தேவியின் முகத்துக்கு பதிலாக பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வக்கீலின் முகம் பொருத்தப்பட்டிருந்தது. அத்துடன் துர்கா தேவியின் கைகள் ஆபாச சைகை காட்டுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

டுவிட்டரில் இது சர்ச்சையை கிளப்பியது. இந்தியர்கள் பலர் யெய்ரின் டுவிட்டர் பதிவில் கண்டன கருத்துகளை பதிவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, தனது தவறை உணர்ந்த யெய்ர் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவை நீக்கியதோடு இந்தியர்களிடம் மன்னிப்பு கோரினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இஸ்ரேலிய அரசியல் பிரமுகர்களை விமர்சிக்கவும் கேலி செய்யவும் ஒரு புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டேன்.

ஆனால் அந்தப்படம் கம்பீரமான இந்து நம்பிக்கையுடன் இணைக்கப்பட்ட ஒரு படம் என்பதை நான் உணரவில்லை. இந்திய நண்பர்களின் கருத்துகளில் இருந்து நான் அதை உணர்ந்தவுடன், அந்தப் பதிவை அகற்றிவிட்டேன். நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.