என் கூட ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறாய் என்று இளம்பெண்ணை 2வதாக திருமணம் செய்துக் கொண்ட கணவர் வெறித்தனமாக குத்திக் கொலைச் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் மேகலா எனும் இளம்பெண்ணுக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரு வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வரும் மேகலாவுக்கு மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். பரமக்குடியில் தனியாக வீடு எடுத்து இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக இருவருக்குள்ளும் தகராறு எழுந்துள்ளது.
அதன் பின்னர் மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்த மேகலா, மணிகண்டன் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளார்.போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை பெரிய கடை பஜார் பகுதியில் கடை ஒன்றில் தனது தாயாருடன் மேகலா இருந்த போது அங்கே சென்ற மணிகண்டன், ‘ஏன் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாய்?’ என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பிரச்சனை அதிகரிக்கவே, மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மேகலாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் மேகலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.