என் வயிற்றில் வளரும் குழந்தை தான் நீ கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு: சிரஞ்சீவியின் மனைவி உருக்கம்…!

882

கன்னட நடிகரும், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. மதிய உணவு சாப்பிட இருக்கையில் இருந்து எழுந்த சிரஞ்சீவி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

சிரஞ்சீவி சார்ஜா நடிகை மேக்னா ராஜை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் சிரஞ்சீவி இறந்துவிட்டார். மேக்னா ராஜ் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.

சிரஞ்சீவியை இழந்து வாடும் மேக்னா ராஜ் தன் காதல் கணவர் பற்றி சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் மேக்னா ராஜ் கூறியிருப்பதாவது,

சிரு, நான் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாலும் நான் உன்னிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நீ எனக்கு எப்படிப்பட்ட கணவர் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் நண்பன், என் காதலர், என் பார்ட்னர், என் பிள்ளை, என் கணவர். என் ஆத்மாவில் ஒரு பாதி நீ சிரு.


நான் ஒவ்வொரு முறை கதவை பார்க்கும் போதும், நான் வீட்டிற்கு வந்துட்டேன் என்று சொல்லிக் கொண்டே நீ நுழையாமல் இருப்பதை பார்க்கையில் சொல்ல முடியாத வலி ஏற்படுகிறது. தினமும் உன்னை தொட முடியவில்லையே எனும்போது என் இதயத்தில் வேதனை ஏற்படுகிறது. ஆனால் மேஜிக் போன்று நீ என்னுடனேயே இருப்பது போன்று உணர்கிறேன்.

நான் எப்பொழுது வீக்காக உணர்ந்தாலும் நீ ஏஞ்சல் போன்று என்னை சுற்றி வருகிறாய். நீ என்னை அளவுக்கு அதிகமாக காதலித்தாய். அதனால் என்னை தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை தானே?. நம் காதலின் அடையாளமாக என் வயிற்றில் வளரும் குழந்தை தான் நீ எனக்கு கொடுத்துச் சென்ற விலை உயர்ந்த பரிசு.

இந்த ஸ்வீட்டான அதிசயத்திற்காக நான் என்றுமே உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நம் குழந்தை வடிவத்தில் உன்னை இந்த உலகிற்கு மீண்டும் கொண்டு வர காத்திருக்கிறேன். உன்னை மீண்டும் என் கைகளில் ஏந்த காத்திருக்கிறேன். மீண்டும் உன் புன்னகையை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

நான் உனக்காக காத்திருக்கிறேன். அதே போன்று நீ எனக்காக அங்கு காத்திரு. என் மூச்சு இருக்கும் வரை நீ வாழ்வாய். நீ எனக்குள் இருக்கிறாய். ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.

மேக்னாவின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

சிரஞ்சீவி சார்ஜா இறந்துவிட்டார் என்கிற வேதனை ஒரு பக்கம் இருந்தாலும், உங்களை பார்க்கும் போது இன்னும் கவலையாக இருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் தான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். உங்களை போன்றே குட்டி சிருவை பார்க்க நாங்களும் ஆவலாக இருக்கிறோம்.

சிரஞ்சீவி என்றுமே நம் இதயத்தில் வாழ்வார் என்று தெரிவித்துள்ளனர்.