ஐஸ்க்ரீம்னா பிடிக்காதவங்க யாருமே இல்ல. சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அதிலும் கொளுத்தும் வெயிலில் ஐஸ்க்ரீம் உருக உருக வழியாமல் சாப்பிடும் ருசியே தனி தான்.
ஆனால் உணவே விஷமாகி வரும் இந்த காலகட்டத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் இரட்டைக்குழந்தைகளை ஒரே நேரத்தில் பறிகொடுத்த தாய் கதறும் காட்சி நெஞ்சை உறைய வைக்கிறது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாநிலம் பெடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் திரிசூல்-த்ரிஷா என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தனர்.
தற்போது கோடை காலம் என்பதால் வாகனத்தில் வைத்து ஐஸ்கிரீம் விற்பனை செய்வது வழக்கமாகிவிட்டது. அதேபோல் பூஜா தனது இரட்டைக் குழந்தைகளுக்கு வாகனத்தில் தங்கள் ஊருக்கு கொண்டு வந்த ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்துள்ளார்.
அதை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே இரட்டைக் குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. மேலும், ஐஸ்கிரீம் சாப்பிட்ட பூஜாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து 2 குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தைகள் உயிரிழந்தனர்.
பூஜாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் அந்த ஊரில் பலர் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
எனவே, இரட்டைக் குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.